குழந்தை பிறந்த பிறகும் தம்பதிகளின் நெருக்கத்தை அதிகரிக்கலாம்


குழந்தை பிறந்த பிறகும் தம்பதிகளின் நெருக்கத்தை அதிகரிக்கலாம்
x
தினத்தந்தி 23 April 2023 1:30 AM GMT (Updated: 23 April 2023 1:30 AM GMT)

குழந்தையை கவனிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுவதால், இருவருக்கும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறையக்கூடும். இதனால் கணவன்-மனைவிக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான புரிதல் குறைந்து, நாளடைவில் இடைவெளி ஏற்படலாம். இதை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்.

ணவன்-மனைவி இருவரது உலகில் புதிதாக ஒரு உயிர் இணைவது அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். குழந்தையின் வரவால் அவர்களின் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். வாழ்க்கை முறையில் மட்டுமின்றி எண்ணங்கள், உணர்ச்சிகள் போன்றவற்றிலும், நேர்மறை மற்றும் சில எதிர்மறை மாற்றங்கள் உண்டாகும். இவற்றை சரியான முறையில் கையாளும்போது தம்பதிக்குள் இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். அதற்கான வழிகள் சில:

இடைவெளியைத் தவிருங்கள்:

குழந்தையை கவனிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுவதால், இருவருக்கும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறையக்கூடும். இதனால் கணவன்-மனைவிக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான புரிதல் குறைந்து, நாளடைவில் இடைவெளி ஏற்படலாம். இதை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும். நேர்மறையான அணுகுமுறை, பொறுமை, நகைச்சுவை உணர்வைப் பகிர்தல் போன்ற விஷயங்கள் இருவருக்கும் இடையேயுள்ள நெருக்கத்தை அதிகரிக்கும். இதனால் மன இறுக்கம் குறையும். குழந்தையை சிறிது நேரம் கவனித்துக்கொள்வதற்கு குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடலாம். தாம்பத்தியம், ஆரோக்கியமான உறவின் அடிப்படை என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

உணர்வுகளைப் பகிருங்கள்:

ஆரோக்கியமான தாம்பத்தியத்தின் அடிப்படை ஒளிவு, மறைவு இல்லாத உரையாடல்தான். புதிதாக பிரசவித்த தாய்மார்களுக்கு மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இது உறவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கான தீர்வை உடனடியாக தேட வேண்டும். நேரத்தை ஒதுக்கி, இருவரும் தங்களுக்குள் இருக்கும் உணர்வை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும். ஒருவரின் பிரச்சினையை மற்றவர் பொறுமையாக கேட்க வேண்டும். தேவையற்ற கிண்டல், மற்றவர் மீது பழி சுமத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குழந்தை பிறந்த பின்பு, சில பெண்களுக்கு மன ரீதியான பிரச்சினை ஏற்படுவது இயற்கையானதுதான். வாழ்க்கைத்துணை போதுமான ஆதரவு கொடுக்கும்போது மனநலத்தில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு, தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

வேலைகளைப் பகிருங்கள்:

குழந்தையை கவனிப்பதில் பெரும்பாலான நேரத்தை செலவிடுவதால், உங்கள் துணையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படலாம். இதுவே, தம்பதிக்குள் ஒருவித இறுக்கத்தை உருவாக்கும். எனவே, கணவன்-மனைவி இருவரும் வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு, வெளி வேலைகள் என அனைத்தையும் பகிர்ந்து செய்ய வேண்டும். இதனால் வேலைச்சுமை குறைவதுடன், பணிகளும் எளிதில் முடியும்.

தாய் மீதான அக்கறை:

குழந்தை பிறந்த பின்பு, தாயின் தூக்க நேரம் குறையலாம். சரிவர தூக்கம் இல்லாததால் அவருக்கு வெறுப்புணர்வு, உடல்நலக்குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே, வீட்டில் இருக்கும்போது குழந்தையை கணவர் கவனித்துக் கொண்டு, மனைவி தூங்குவதற்கு போதுமான நேரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.


Next Story