மாதவிடாய் வலியை குறைக்கும் சாக்லெட்


மாதவிடாய் வலியை குறைக்கும் சாக்லெட்
x
தினத்தந்தி 17 July 2022 11:21 AM GMT (Updated: 17 July 2022 11:21 AM GMT)

மாதவிடாய் நாட்களில் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் மன அழுத்தம், கோபம், எரிச்சல், சோகம் போன்ற உணர்வுகளை உண்டாக்கும் ‘கார்டிசோல்’ எனும் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்.

மாதவிடாய் நாட்கள் பல பெண்களுக்கு நெருக்கடியான காலகட்டமாகும். இந்த சமயங்களில் தசைப்பிடிப்பு, வீக்கம் மற்றும் மனநிலையில் மாற்றம் போன்ற பிரச்சினைகளை பெரும்பாலானோர் சந்திக்கிறார்கள். மாதவிடாயின்போது வயிற்று வலி மற்றும் உடல் வலி அதிகமாக இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் இனிப்புகள் சாப்பிடும் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் பல பெண்கள், சாக்லெட்டை விரும்பி சாப்பிடுவார்கள். இவ்வாறு சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? அல்லது ஏதாவது எதிர் விளைவுகளை ஏற்படுத்துமா? என்ற சந்தேகம் பெண்கள் மத்தியில் உள்ளது.

மாதவிடாய் நாட்களில் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் மன அழுத்தம், கோபம், எரிச்சல், சோகம் போன்ற உணர்வுகளை உண்டாக்கும் 'கார்டிசோல்' எனும் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். கார்டிசோல் அளவு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டால், உடல் 'செரோடோனின்' என்ற மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோனை வெளியிட சிரமப்படும்.

கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த ஏதேனும் உணவுப் பொருளை சாப்பிட்டால் செரோடோனின் ஹார்மோன் எளிதாகச் சுரக்கும். 'சாக்லெட்'டில் இந்தப் பொருட்கள் நிறைந்துள்ளன. இதனால் பெண்கள் சாக்லெட் சாப்பிடலாம்.

மாதவிடாய் காலத்தில் இடுப்பு, வயிறு மற்றும் தொடைகள் வலிக்கும்போது சாக்லெட் சாப்பிடுவது நல்லது. அதிலும் அடர்ந்த கருப்பு நிறத்தில், சற்று கசப்பு சுவையுடன் இருக்கும் 'டார்க் சாக்லெட்' சாப்பிடுவது சிறந்தது. இதில் மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. அதிகபட்சம் 85 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக 'கோகோ' கலக்கப்பட்ட டார்க் சாக்லெட்டை தேர்வு செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

மாதவிடாய் காலத்தில் தினமும் 40 முதல் 120 கிராம் சாக்லெட் சாப்பிடுவது வலியைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டார்க் சாக்லெட்டில் வைட்டமின் ஏ, பி1, சி, டி மற்றும் ஈ உள்ளது. கூடுதலாக, இதில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, சிறிதளவு ஒமேகா 3, 6 மற்றும் அதிக தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி குறையும்.

கோகோ நிறைந்த டார்க் சாக்லெட் மெக்னீசியத்தின் சக்திவாய்ந்த மூலமாகும். இது இயற்கையான வலி நிவாரணியாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் உடலில் பதற்றம் மற்றும் பிடிப்புகள் ஏற்படும்போது மெக்னீசியம் கருப்பையின் தசைகளை அமைதிப்படுத்தும். உடலில் இரும்புச் சத்து அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது.

மாதவிடாய் காலத்தில் ரத்தத்துடன் தாதுக்கள் இழக்கப்படும்போது, சோர்வு ஏற்படும். இந்த நேரத்தில் சாக்லெட் சாப்பிடுவது உடலுக்கு, தேவையான ஆற்றலைத் தரும். மேலும் முந்திரி, திராட்சை கலந்த நட்ஸ் சாக்லெட், பெர்ரீஸ் வகை சாக்லெட், உப்பு கலந்த சாக்லெட் போன்றவற்றை மாதவிடாய் நாட்களில் சாப்பிடுவது வலியை குறைக்க பெருமளவில் உதவும்.


Next Story