முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம்


முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Oct 2023 1:30 AM GMT (Updated: 1 Oct 2023 1:30 AM GMT)

45 வயதிற்கு முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின் இறுதி நிலையே 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிறுத்தமாகும். வயது முதிர்ச்சியின் காரணமாக பெண்களின் உடலில் பாலியல் ஹார்மோன்களின் அளவு குறையும். கருப்பையில் இருந்து வெளிவரும் 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் சுரப்பின் அளவு குறைவதோ அல்லது நிறுத்தப்படுவதோ இதற்கு காரணமாகும்.

பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து மாதவிடாய் நிறுத்தத்திற்கான வயது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். சில பெண்களுக்கு 45 வயதிலும், சிலருக்கு 50 வயதிலும் 'மெனோபாஸ்' ஏற்படலாம். மாதவிடாய் நிறுத்தத்திற்கான சராசரி வயது 45 முதல் 55 வரையாகும். ஒருசில பெண்கள் 40 வயதிற்குள்ளேயே மாதவிடாய் நிறுத்தத்தை அடைந்து விடுகிறார்கள். இதனை 'முன்கூட்டிய கருப்பை செயலிழப்பு' என்கிறோம்.

முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

பிறக்கும்போதே பெண்களின் உடலில் 4 லட்சம் வரையிலான கருமுட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இந்த கருமுட்டைகள் முதிர்ச்சி அடைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு மாதவிடாயின் போதும் ஒரு கருமுட்டை வெளியேற்றப்படும். பிறக்கும்போதே குறைவான அளவு கருமுட்டைகள் கொண்ட பெண்களுக்கு 40 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும். இதுமட்டுமில்லாமல் குரோமோசோம் குறைபாட்டுடன் பிறப்பவர்களுக்கும், இளம் வயதிலேயே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம். கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவோர், கருப்பையை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்வோர் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படக்கூடும். சிலருக்கு இது மரபு வழியாகவும் ஏற்படலாம்.

முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள்:

6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முறையற்ற மாதவிடாய் ஏற்படும். தாமதமாக மாதவிடாய் வருவது, குறைந்த அல்லது அதிகப்படியான நாட்கள் ரத்தப்போக்கு ஏற்படுவது போன்றவை மாதவிடாய் நிறுத்தத்திற்கான முக்கியமான அறிகுறிகளாகும். இது தவிர முகம், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் அதிக வெப்பத்தை உணர்தல், பிறப்புறுப்பில் வறட்சி, தூக்கமின்மை, தோல் கருமை அடைதல் அல்லது வறண்டு காணப்படுதல், தலைவலி, உணர்வு ரீதியான மாற்றங்கள், அதிக அளவு முடி உதிர்தல், எடை அதிகரிப்பு, அதிகளவு சிறுநீர் கழித்தல் போன்றவைகளும் மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகளாகும்.

முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்திற்கான தீர்வுகள்:

45 வயதிற்கு முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வாரத்தில் 2 நாட்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடலில் வெப்பம் குறைந்து ஹார்மோன் சுரப்பு சீராகும்.


Next Story