வீரக்கலை பயில ஊக்குவிக்கும் விஜயலட்சுமி


வீரக்கலை பயில ஊக்குவிக்கும் விஜயலட்சுமி
x
தினத்தந்தி 5 Feb 2023 1:30 AM GMT (Updated: 2023-02-05T07:00:49+05:30)

எனக்கு பரதம் மீது தீராத காதல் இருந்தது. நான் கற்றால் மட்டும் போதாது, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தொடங்கப்பட்ட நடனப்பள்ளியில், தற்போது வரை 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி எடுத்துள்ளனர்.

சென்னையில் வசிக்கும் விஜயலட்சுமி ஸ்ரீதர், தற்காப்பு பயிற்சியாளர் மற்றும் பரதநாட்டிய ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். நல்லாசிரியர் விருது, நாட்டியகலா விருது, பெண் அதிகாரச் சாதனையாளர் விருது, சிறந்த பெண்மணி விருது, சிறந்த குறும்பட இயக்குநர் விருது போன்ற பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

இளம்பெண்களை துணிவு மிக்கவர்களாகவும், தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்களாகவும் மாற்ற வேண்டும் என்ற முனைப்போடு இயங்கிவரும் அவருடன் ஒரு சந்திப்பு.

தற்காப்பு பயிற்சி தொடங்கிய அனுபவம் குறித்து சொல்லுங்கள்?

நான் திருநெல்வேலியில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது, படித்தது எல்லாமே தூத்துக்குடியில் தான். என்னுடைய தாத்தா கந்தசாமி, பாட்டி ஜானகி இருவரும் சுதந்திரப் போராட்ட தியாகிகள். துறைமுகம் கட்டுவது தொடர்பாக நேருவும், காமராஜரும் தூத்துக்குடி வந்திருந்தபோது, சில மணிநேரம் எங்கள் வீட்டில் தங்கி சென்றதை பெருமையாகக் கூறுவார்கள். நான் கல்லூரி படித்த காலத்திலேயே, பெண்களுக்கு நடக்கும் இன்னல்களை நேரடியாகவும், செய்திகள் மூலமாகவும் அறிந்து கொண்டேன். இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் வகையில், பெண்களுக்கு தற்காப்பு கலையை பயிற்றுவிக்க வேண்டியது அவசியம் என்று உணர்ந்தேன்.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 'அக்னி தேவதை' என்ற குறும்படத்தை இயக்கினேன். அனைவரும் பார்க்கும் வகையில் அதை மவுனப் படமாகவே எடுத்தேன். 13 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்தக் குறும்படத்தைப் பார்த்தனர். அவர்களில் பலர் தங்கள் மகள்களை தற்காப்பு கலை பயிற்சிப் பள்ளியில் சேர்த்தனர்.

அது போல, மதுரவாயலில் உள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக கராத்தே பயிற்சியை புகழ்பெற்ற பயிற்சியாளர் மூலம் வழங்கினோம். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை மட்டுமில்லாமல், தூத்துக்குடி, திருநின்றவூர் போன்ற பல்வேறு இடங்களுக்குச் சென்று பெண்களுக்கு கராத்தே பயிற்சி கொடுத்தோம்.

ஏராளமான ஆசிரியர்களுக்கும் தற்காப்புக் கலை பயிற்சி அளித்தோம். கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை 2500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச தற்காப்பு பயிற்சிகள் வழங்கி இருக்கிறோம்.

நான் தற்காப்பு கலை பயிற்சி வழங்கிய மாணவிகளில் பலர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றவர்களை, தற்காப்பு கலை நுணுக்கங்களைக் கொண்டு தாக்கிவிட்டு தப்பித்ததாக கூறி இருக்கின்றனர். அவ்வாறு அவர்கள் கூறுவதை கேட்கும் போது, நான் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

பரதக்கலை பயிற்சியின் தொடக்கமும், முன்னேற்றமும் பற்றி?

எனக்கு பரதம் மீது தீராத காதல் இருந்தது. நான் கற்றால் மட்டும் போதாது, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தொடங்கப்பட்ட நடனப்பள்ளியில், தற்போது வரை 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி எடுத்துள்ளனர். அவர்களில் பலர் தொலைக்காட்சி, திரைப்படத்துறை போன்றவற்றில் பணியாற்றுகின்றனர்.

ஒரு நடன ஆசிரியர் தன் மாணவிகளுக்கு நடனத்தோடு, தன்னம்பிக்கையும் கற்றுத்தர வேண்டும். 'உன்னால் முடியும்' என்று எப்போதும் ஊக்குவிக்க வேண்டும். இதையே நானும் பின்பற்றி வருகிறேன்.


Next Story