மூலிகைத் தலையணைகள் தயாரிப்பு


மூலிகைத் தலையணைகள் தயாரிப்பு
x
தினத்தந்தி 30 April 2023 1:30 AM GMT (Updated: 30 April 2023 1:30 AM GMT)

மனதையும், உடலையும் அமைதிப்படுத்தி, நிம்மதியான தூக்கத்தை கொடுக்கக்கூடிய மூலிகை இலைகளையும், பூக்களையும் தலையணை உறையில் பொதிந்து பயன்படுத்தலாம். இதன் அடிப்படையில் தான், ‘மூலிகைத் தலையணைகள்’ தயாரிக்கப்படுகின்றன.

டல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அடிப்படை விஷயங்களில் ஒன்று தூக்கம். அதேசமயம் பலருக்கும் முழுமையாக கிடைக்காததும் தூக்கம்தான். வேலைப்பளு, மன அழுத்தம், பதற்றம், அசவுகரியங்கள், டிஜிட்டல் சாதனங்கள் என சீரான தூக்கத்திற்கு தடையாக பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை தவிர்த்து, இயற்கையான முறையில் போதுமான தூக்கத்தை பெறுவதற்கு கையாளும் வழிகளில் ஒன்றுதான் 'மூலிகைத் தலையணைகள்'.

இயற்கை மருத்துவ முறைகள் நிறைந்திருக்கும் நமது நாட்டில், ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் பல மூலிகைகள் உள்ளன. நமக்கு அருகிலும், நம்மைச் சுற்றியும் பல்வேறு மூலிகைகள் விளைகின்றன. அந்த வகையில் மனதையும், உடலையும் அமைதிப்படுத்தி, நிம்மதியான தூக்கத்தை கொடுக்கக்கூடிய மூலிகை இலைகளையும், பூக்களையும் தலையணை உறையில் பொதிந்து பயன்படுத்தலாம். இதன் அடிப்படையில் தான், 'மூலிகைத் தலையணைகள்' தயாரிக்கப்படுகின்றன. பெண்கள் இதனை தொழில் வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதற்கு பெரிய அளவிலான முதலீடுகளோ, வேலை ஆட்களோ தேவையில்லை. உங்கள் பகுதிக்கு அருகிலேயே கிடைக்கும் மூலிகை இலைகளை சேகரிக்கலாம். அவற்றை நிழலில் உலர்த்துவதற்கு ஏற்ற வகையில் இடவசதி மட்டுமே வேண்டும். மூலிகைத் தலையணைகள் தயாரிப்பு மூலம், வீட்டில் இருந்தபடியே வருமானம் ஈட்டலாம். அதேநேரம் உங்கள் தயாரிப்பு தரமானதாகவும், பலன் அளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - ஒரு கிலோ

நொச்சி இலை, மருதாணி இலை, மருதாணிப்பூ, அத்தி இலை, அரச இலை, ஆல இலை, மாவிலை, துளசி இலை, வேப்பிலை, மஞ்சனத்தி இலை, ஆடாதொடை இலை, யூகலிப்டஸ் இலை - தலா ஒரு கைப்பிடி

பருத்தி தலையணை உறை

நூல்

ஊசி

செய்முறை:

முதலில் எல்லா வகையான இலைகளையும் காம்பு மற்றும் தூசுகள் இல்லாமல் சுத்தம் செய்யுங்கள். பின்னர் நிழலில் உலர்த்துங்கள். இலைகள் ஈரப்பதம் இல்லாமல் முழுவதுமாக உலர வேண்டும்.

பின்னர் பருத்தி தலையணை உறை ஒன்றில் ஒரு கைப்பிடி இலைகள், கொஞ்சம் அரிசி என ஒவ்வொரு அடுக்காக நிரப்புங்கள். மருதாணிப் பூக்களையும் இடையிடையே போடுங்கள். தலையணை உறையின் வாய்ப்பகுதியை மடித்து ஊசி நூலால் தையல் இடுங்கள். இதனை இன்னொரு தலையணை உறைக்குள் போடுங்கள். அப்போதுதான் உள்ளே இருக்கும் பொருட்கள் வெளியில் சிதறாது. இதனை சுமார் ஆறு மாத காலம் வரை பயன்படுத்தலாம்.

நன்மைகள்:

இந்த தலையணையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைவலி, மூக்கடைப்பு, சளி, கழுத்துவலி, பேன் தொல்லை, தூக்கமின்மை உட்பட பல்வேறு உடல் உபாதைகள் குறையும்.

நொச்சி இலைகள் சைனஸ் பிரச்சினைகளுக்கு நல்லது. வேப்பிலை கிருமி நாசினியாக செயலாற்றும். மருதாணி இலைகளும், பூக்களும் மனஅமைதி அளித்து ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும். இந்த மூலிகைத் தலையணைகள் அனைத்து வயதினருக்கும் பயன்படும்.

விற்பனை:

பெண்கள் முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ இத்தொழிலை மேற்கொள்ளலாம். மூலிகைத் தலையணைகளை சந்தைப்படுத்த ஆர்கானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளை அணுகலாம். ஆன்லைன் வணிகத் தளங்கள் மூலம் விற்பனை செய்யலாம். இவ்வகையான மூலிகைகள் கிராமங்களில் சுலபமாகக் கிடைக்கும் என்பதால், இது சிறிய நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் வசிப்பவர்களுக்கு ஏற்ற சிறுதொழிலாகும்.


Next Story