அலங்கார மின்விளக்குகள் அமைக்கும்போது கவனிக்க வேண்டியவை


அலங்கார மின்விளக்குகள் அமைக்கும்போது கவனிக்க வேண்டியவை
x
தினத்தந்தி 1 Oct 2023 1:30 AM GMT (Updated: 1 Oct 2023 1:30 AM GMT)

பண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிக்க வெளிர் மஞ்சளும், தங்க நிறமும் கலந்த மின்விளக்குகளையே பலரும் தேர்ந்தெடுப்பார்கள். இது மாயாஜாலம் நிறைந்த உலகத்துக்குள் செல்லும் உணர்வை உண்டாக்கும். வீட்டிற்கு உயிரோட்டமான அமைப்பு மற்றும் உணர்வை அளிக்கும்.

புதிதாக வீடு கட்டும்போதும், பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும், வீட்டை அலங்கரிக்க வண்ண மின்விளக்குகள் அமைப்பது அனைவரின் வழக்கமாகும். ஒளிவீசும் இவ்வகை விளக்குகள் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். இத்தகைய மின்விளக்குகள் அமைக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவை,

புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு:

ஹாலின் நடுவில் தங்க நிற விளக்கும், ஹாலின் மூலைப் பகுதிகளில் நீலம், பிங்க், ஊதா என சுவரின் வண்ணத்திற்கு ஏற்ற வகையிலும் மின்விளக்குகளை அமைக்கலாம். படுக்கை அறையில் வெளிர் சில்வர், சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிற விளக்குகளை அமைக்கலாம். பால்கனி மற்றும் வீட்டின் முன்புறம் மஞ்சள், நீலம் அல்லது வெளிர் பச்சை நிற விளக்குகளை அமைக்கலாம்.

வீட்டின் முன்புறம் மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு குடுவை வடிவ விளக்குகளையும், படுக்கை அறைக்கு தரையுடன் ஒட்டி இருக்கும்படியான மின்மினிப்பூச்சிகள் போல காட்சி அளிக்கும் ஒயர் வடிவ விளக்குகளையும், பால்கனி அல்லது மாடிப்பகுதிக்கு சிறிய வடிவில் இருக்கும் போக்கஸ் லைட் வகை மின்விளக்கையும் தேர்ந்தெடுக்கலாம்.

பண்டிகை காலங்களுக்கு:

பண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிக்க வெளிர் மஞ்சளும், தங்க நிறமும் கலந்த மின்விளக்குகளையே பலரும் தேர்ந்தெடுப்பார்கள். இது மாயாஜாலம் நிறைந்த உலகத்துக்குள் செல்லும் உணர்வை உண்டாக்கும். வீட்டிற்கு உயிரோட்டமான அமைப்பு மற்றும் உணர்வை அளிக்கும்.

பால்கனிக்கு சில்வர் நிற விளக்குகளையும், வீட்டின் கூரை, ஜன்னல் மற்றும் மாடிப்படிகளுக்கு ஊதா மற்றும் வெளிர் பிங்க் நிற விளக்குகளையும், படுக்கை அறைக்கு மங்கிய மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிற விளக்குகளையும் அமைக்கலாம்.

ஆன்மிகம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தங்க நிற விளக்கையும், பிறந்த நாள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு நீலம், சிவப்பு மற்றும் பச்சை என கலவையான நிற விளக்குகளையும், வாழ்த்து சொல்லும் நிகழ்வுகளுக்கு ஊதா மற்றும் சில்வர் நிற விளக்குகளையும் அமைக்கலாம்.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்றபடி மின்விளக்கு வடிவங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. பிறந்த நாள், திருமண நாள் போன்ற வாழ்த்துக்களை பகிரும் நிகழ்வுகளுக்கு செயின் விளக்குகளையும், ஆன்மிக நிகழ்வுகளுக்கு குறைந்த பட்சம் 2 அடி அளவில் இருக்கும் நீளமான விளக்குகளையும், பாரம்பரியம் சார்ந்த பண்டிகை நாட்களுக்கு கிளிப் வடிவிலான எல்.இ.டி. விளக்குகளையும் அமைக்கலாம்.

குழந்தைகள் இருக்கும் வீட்டில் தனித்தனியாக வயரில் இணைக்கப்பட்டிருக்கும் சீரியல் மின் விளக்குகளுக்குப் பதிலாக தொடர்ச்சியாக ஒரு பைப்பிற்குள் மூடி இருக்கும்படியான ரோப் மின்விளக்குகளைப் பயன்படுத்தலாம். கண்ணாடி மற்றும் பைபர் கிளாஸ் மூலம் தயார் செய்யப்பட்ட கிளிப் மின்விளக்குகள் பாதுகாப்பானவை. அது மட்டுமல்லாமல் இவற்றில் தண்ணீர் பட்டாலும் மின்கசிவு ஏற்படாது.


Next Story