12 ராசியினரும் வழிபடவேண்டிய கணபதி வடிவங்கள்

ஒவ்வொருவரும் தங்கள் ராசிக்குரிய விநாயகர் வடிவங்களை வழிபடுவது கூடுதல் பலன்கள் பெற வழிவகுக்கும்.
விநாயகர் வழிபாடு
விநாயகர்
Published on

முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடு செய்தால், அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். எந்தவொரு புதிய காரியத்தைத் தொடங்கும் முன்பும் விநாயகரை வழிபடுவது இந்துக்களின் வழக்கம். இதன்மூலம் அந்த காரியங்களில் ஏற்படக்கூடிய தடைகளை விநாயகப்பெருமான் அகற்றி வெற்றியை தருவார் என்பது நம்பிக்கை. அதனால்தான் “கணபதி இருக்கும்வரை கவலை இல்லை” என்று சொல்வதுண்டு.

ஓம் என்ற பிரணவப் பொருளின் உருவத்தைக் கொண்ட விநாயகப்பெருமானை பல்வேறு ரூபங்களில் வழிபட்டாலும், தங்கள் ராசிக்குரிய ரூபங்களை வழிபடுவதன்மூலம் கூடுதல் பலன்களை பெறலாம். அதன் விவரம்:

1. மேஷம்

செவ்வாயின் ஆதிக்கத்தை பெற்ற நீங்கள் வீரம் மிக்கவர்கள், எவருக்கும் அஞ்சாதவர்கள். ஆகவே நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.

2. ரிஷபம்

நீங்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்று அமபிகையின் பரிபூரண அருளுக்கு பாத்திரமானவர்கள். 12 ராசிகளிலேயே சந்திரன் உச்சம் பெற்று இருப்பது உங்களுடைய ஜாகத்தில்தான். இயற்கையில் ராஜ யோகத்தை பெற்ற நீங்கள், வழிபட வேண்டிய கணபதி, ராஜ ராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி.

3. மிதுனம்

பல்வேறு திறமையை உடைய உங்க மிதுன ராசிக்காரர்கள் அடிக்கடி கண் திருஷ்டி உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடும். இவர்களின் திறமையும் வளர்ச்சியும் அடுத்தவர்களிடையே போட்டி பொறாமையை வளர்க்கலாம். எனவே, எதிரிகளைப்பற்றி அதிகம் கவலைப்படாவிட்டாலும், மறைமுகமாக வந்து சேர்கின்ற தாக்குதல்களிலிருந்து விடுபடுவதற்கு, கண் திருஷ்டி கணபதியை வழிபடுவது நல்லது.

4. கடகம்

பல்கலை வித்தகராக ஞானம் கொண்டவராக திகமும் நீங்கள், ஒரு நேரம் சாந்தம் ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டுபவர். நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.

5. சிம்மம்

இயற்கையில் தைரிய குணமிக்க நீங்கள், என்றுமே வெற்றித் திருமகளின் துணையை நாடுபவவர்கள். 12 ராசிகளில் தலைமை குணத்தினை உடைய உங்களுக்கு, தன்னம்பிக்கை எப்போதும் குறையாது. அசாத்தியமான மனவலிமையுடன் என்றென்றும் வெற்றிப்பாதையில் செல்வீர்கள். நீங்கள் வழிபட வேண்டிய கணபதி, விஜய கணபதி ஆவார்.

6. கன்னி

இயற்கையில் மென்மையான குணத்தினை உடைய நீங்கள், உங்களின் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து செயல்படும்போது உங்களை வெல்ல எவராலும் இயலாது. நீங்கள் வழிபடவேண்டிய கணபதி உச்சிஷ்ட கணபதி.

7. துலாம்

அயராத உழைப்பினை உடைய நீங்கள், மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓயமாட்டீர்கள். ஒரு லட்சியத்தை அடைந்துவிட்டால், ஒய்ந்துவிடாமல் அடுத்த லட்சியத்தை நாக்கி நாடிச் செல்வீர்கள். முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்ற கொள்கை கொணட உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் ‘க்ஷிப்ர பிரசாத கணபதி’

8. விருச்சிகம்

இயற்கையில் மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காமல், சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். பிறகு பார்க்கலாம் என்று எண்ணாமல் நினைத்த காரியத்தை உடனடியாக செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். சதா பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியர் நர்த்தன கணபதி.

9. தனுசு

குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்ற நீங்கள், நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். குறுக்குவழியில் செல்ல விருப்பம் இல்லாதவர்கள். தர்மநெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் நீங்கள், சங்கடஹர கணபதியை வழிபடவேண்டும்.

10. மகரம்

சனி பகவானின் ஆதிக்கத்தை பெற்ற நீங்கள், தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மை இருப்பதால் ஒரு சில இழப்புகள் ஏற்படலாம். அடிக்கடி மனக்குழப்பம் வந்துபோகும். மனதினை அடக்கியாள கற்றுக் கொண்டால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியர் யோக கணபதி.

11. கும்பம்

அனுபவ அறிவின் மூலம் அடுத்தவர்களை அடக்கி ஆள நினைக்கும் நீங்கள், அறிந்திராத விஷயங்களைக் கூட தெரியாது என்பதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் செல்படுவீர்கள். அதேநேரத்தில் தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்வதிலும் ஆர்வம் கொள்வீர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொள்ளும் தனித்திறமை பெற்றவர் நீங்கள். நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.

12. மீனம்

சூதுவாது தெரியாத நீங்கள், கள்ளம் கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையர்வர்கள். அதேசமயம் தான் நினைத்ததை அடைந்துவிடவேண்டும் என்ற பிடிவாத குணமும் இருக்கும். நீங்கள் பால கணபதியை வழிபட வாழ்வில் ஏற்றம் ஏற்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com