அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் 193-வது ஆடித் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையின் தென்பகுதியில் அமைந்துள்ளது அய்யா வைகுண்டர் அவதாரப்பதி. இங்கு 193-வது ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடி மரத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்தில் வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர் கொடியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து, கொடி பட்டம் கோயிலில் இருந்து ஊர்வலமாக பக்தர்களால் எடுத்து வரப்பட்டு பதியை சுற்றி வந்து மீண்டும் பதியை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 29-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






