திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு

தொடர் விடுமுறையால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.
திருமலை,
பொங்கல் பண்டிகையையொட்டி 15-ந்தேதியில் இருந்து நேற்று வரை தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
அதில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு பஸ்களிலும், ஒருசில பக்தர்கள் தங்களுடைய சொந்த வாகனங்கள், உள்ளூர் ஜீப், கார், வேன்களிலும் திருமலைக்கு வந்தனர். அத்துடன் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக பக்தர்கள் நடந்து திருமலைக்கு வந்தனர்.
அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வாகனங்களில் வந்ததால் அலிபிரி சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சோதனைக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் பலமணிநேரம் காத்திருந்தன. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி பாபவிநாசனம் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதேபோல் நாராயணகிரி தோட்டத்தில் உள்ள ஜெர்மன்செட் கொட்டகைகளில் பக்தர்கள் நிரம்பினர்.
திருமலையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பக்தர்கள் நடுங்கும் குளிரில் பலமணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பால், டீ, காபி, அன்னப்பிரசாதம், குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
அசம்பாவிதம் சம்பவம் நடக்காமல் இருக்க தரிசன வரிசைகளில் தேவஸ்தான பறக்கும் படை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணிநேரம் ஆனது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் 78 ஆயிரத்து 733 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 146 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 41 லட்சம் ஆகும்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 20 மணியில் இருந்து 24 மணி நேரம் வரை ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.






