வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்களில் திருப்பதியில் 7.83 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

கோப்புப்படம்
10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.41.14 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.41.14 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அறங்காவலர் குழு தலைவர் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த மாதம் 30-ந்தேதி வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு நேற்று வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் 2 ஆயிரம் போலீசார், 1,150 தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாப்பு பணியாளர்கள், மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முழு அர்ப்பணிப்புடன் பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.
10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.41.14 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 44 லட்சம் லட்டுகளை பக்தர்கள் பெற்று சென்றுள்ளனர். 2.60 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் தலைமுடிகளை காணிக்கையாக செலுத்தினர். கடந்த ஆண்டு 6.83 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பக்தர்கள் கூடுதலாக வைகுண்ட வாயில் வழியாக சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் 10 லட்சம் லட்டுகள் கூடுதலாக தயார் செய்து பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






