

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, வீர ஆஞ்சநேயர் திருக்கோவில். இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு இடையே அமைந்துள்ள இக்கோவிலில் மூலவரான ஆஞ்சநேயர் ஆறரை அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வைகை ஆற்றில் நீராடி விட்டு ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள்.
கி.பி.16-ம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் மதுரை பகுதியை ஆட்சி செய்துவந்தார். அந்த காலகட்டத்தில் அம்மைநாயக்கனூர் பகுதியில் காமயசாமி என்பவர் ஜமீன்தாராக இருந்தார். இவர் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் வைகை ஆற்றங் கரையோரத்தில் ஓய்வெடுப்பது வழக்கம். அவ்வாறு ஒருநாள் ஓய்வெடுக்கும்போது, அவரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் "வைகை ஆற்றில் தாழம்செடிக்கு நடுவே நான் சுயம்புவாக எழுந்தருளி உள்ளேன். அந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டி வழிபடு” என்று கூறினார்.
உடனே கண்விழித்த ஜமீன்தார், ஆஞ்சநேயர் கனவில் கூறிய இடத்தை தேடி அலைந்தார். அப்போது, ஒரு இடத்தில் தாழம்செடி புதர் இருப்பதை கண்டார். அந்த தாழம் செடியை அகற்றிவிட்டு பார்த்தபோது, அங்கு ஒரு பாறை தென்பட்டது. அதில் ஆஞ்சநேயர் உருவம் இருந்தது. அந்த பாறையை தோண்டி எடுக்க முயன்றார். ஆனால் அவரால் நகர்த்தகூட முடியவில்லை. பின்பு, அங்கேயே கோவில் எழுப்பியதாக தல வரலாறு கூறுகிறது.
இதேபோல் மற்றொரு புராண கதையும் சொல்லப்படுகிறது. மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது, இத்தலத்திற்கு அருகில் உள்ள சித்தர் மலையில் சில காலம் தங்கி இருந்தனர். ஒரு நாள் பாஞ்சாலி சிவ பூஜை செய்வதற்கு தண்ணீர் தேவைப்பட்டது. இதையடுத்து தர்மர், மலை அடிவாரத்தில் உள்ள வேகவதி ஆற்றில் (தற்போதைய வைகை ஆறு) இருந்து தண்ணீர் எடுத்து வரும்படி பீமனிடம் கூறினார்.
அதன்படி பீமன் தண்ணீர் கொண்டு வருவதற்காக மலையில் இருந்து கீழே இறங்கி ஆற்றுக்கு வந்தார். அப்போது பீமனை தண்ணீர் எடுக்க விடாமல் ஒரு பெரிய வானரம் தடுத்தது. இது, பெரிய பலசாலியான பீமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதையடுத்து வானரத்துக்கும், பீமனுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. இறுதியில் பீமன் தோல்வி அடைந்து சித்தர் மலைக்கு திரும்பினான். அங்கு தனது மூத்த சகோதரன் தர்மனிடம் நடந்தவற்றை கூறினான். அப்போது தர்மர் தனது ஞானத்தால் நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். பின்னர் தம்பியிடம் உன்னை ஆற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்த வானரம் வேறுயாருமல்ல, ஆஞ்ச நேயர் தான் என்றார்.
பீமனும், ஆஞ்சநேயரும் வாயுபுத்திரர்கள் ஆவர். எனவே தர்மர், தம் தம்பியான பீமனிடம், 'ஆஞ்சநேயர் உனது அண்ணன் தான். அவரிடம் மன்னிப்பு கேட்டு தண்ணீர் எடுத்து வா' என்று கூறி பீமனை அனுப்பினார். மீண்டும் ஆற்றுக்கு சென்ற பீமன், ஆஞ்சநேயரை நினைத்து மனமுருகி மன்னிப்பு கேட்டார்.
உடனே அங்கு தோன்றிய ஆஞ்சநேயர், வேடிக்கை காண்பிக்கவே அவ்வாறு நடந்து கொண்டதாக கூறி, ஆற்றில் தானே தண்ணீர் எடுத்து வந்து பீமனிடம் கொடுத்தார். பின்னர் அந்த இடத்தில் தன்னை வழிபட்டு வருமாறு கூறி மறைந்தார். அதன்படி ஆஞ்சநேயரை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து பீமன் வழிபட்டதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது.
கோவில் கருவறையில் வீர ஆஞ்சநேயர், வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் காட்சி தருகிறார். சுமார் ஆறரை அடி உயரத்தில் உள்ள ஆஞ்சநேயர், ஒரு கண்ணை அயோத்தியை பார்ப்பது போலவும், மற்றொரு கண்ணை தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு கருணை பொழிவது போலவும் உள்ளது. ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். எனவே இங்கு நவக்கிரகங்களுக்கு பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
கருவறையின் வலதுபக்கம் கன்னிமூலையில் விநாயகர் சன்னிதி உள்ளது. அதற்கு முன்பாக நாகர் சன்னிதியும் காணப்படுகிறது. சப்த கன்னியர்கள், கருப்பண்ணசாமி ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. கோவில் வளாகத்திலேயே ஒரு கிணறு அமைந்துள்ளது. அதன் தண்ணீரே ஆஞ்சநேயரின் அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி, ராம நவமி, சித்ரா பவுர்ணமி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தை, புரட்டாசி மாத அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கும் பலர் வருகை தருகிறார்கள். அனுமன் ஜெயந்தி அன்று, பக்தர்கள் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள். முழு விரதம் இருக்க முடியாதவர்கள், பழம் மட்டும் சாப்பிட்டு, 'ஸ்ரீராம ஜெயம்' எழுதி, ஆஞ்சநேயர் பாடல்களை பாடியும், வெற்றிலை, வடை மாலை சாற்றியும் வழிபடலாம்.
சனி தோஷம் உள்ளவர்கள், சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஆஞ்சநேயருக்கு கறுப்பு ஆடை அணிவித்து வழிபடுகிறார்கள்.
வீரம், ஆரோக்கியம், அறிவு, நல்ல படிப்பு போன்றவை கிடைக்கவும், தொழிலில் சிறந்து விளங்கவும் இங்குள்ள ஆஞ்சநேயரிடம் வேண்டுதலை முன்வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குறிப்பாக, சனி, புதன்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும், வத்தலகுண்டுவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.