பூமி தோஷங்கள் போக்கும் பரிகார தலம்

உலக நன்மைக்காகவும், இயற்கை செழிக்கவும் பூமிநாதர் கோவிலில் மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை மகா ருத்ர யாகம் நடைபெறுகிறது.
பூமிநாதர்-அறம் வளர்த்த நாயகி
பூமிநாதர்-அறம் வளர்த்த நாயகி
Published on

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது, பூமிநாதர் திருக்கோவில். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இக்கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் பூமிநாதர் என்றும், இறைவி அறம் வளர்த்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். பூமி சம்பந்தமான அனைத்து தோஷங்களையும் போக்கும் சிறந்த பரிகாரத் தலமாக இக்கோவில் விளங்குகிறது.

இந்த ஆலயம் அழகிய ராஜகோபுரத்துடன் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜ கோபுரத்தை கடந்து சென்றால் கொடிமர விநாயகரும், நந்தியும் காட்சி அளிக்கின்றனர். அடுத்ததாக கொடிமரம், பலிபீடம் காணப்படுகிறது. மகாமண்டபத்தின் நுழைவுவாசலில் இடதுபுறமாக விநாயகரும், வலதுபுறமாக முருகனும் அருள்பாலிக்கிறார்கள். அவர்களை கடந்து சென்றதும், தனிச் சன்னிதியில் அன்னை அறம் வளர்த்த நாயகி தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். இவர் 'தர்மசம்வர்த்தினி' என்றும் அழைக்கப்படுகிறார். அன்னையின் முன்பாக மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அர்த்த மண்டபத்துக்கு அடுத்ததாக காணப்படும் கருவறையில் இறைவன் பூமிநாதர், லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவ கோட்டத்தின் தென்புறத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். விநாயகர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, கஜலட்சுமி, வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

மகா மண்டபத்தின் கிழக்கில் சூரிய - சந்திரர்கள் காட்சி தருகிறார்கள். கொடிமர மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் உள்ளன. அதில் சூரிய பகவான், மற்ற கிரகங்களை பார்ப்பது போன்று நடுநாயகமாக வீற்றிருக்கிறார். இங்கு ராகு - கேது பகவான்கள் முழு மனித உருவில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.

கோவிலின் கிழக்கு பிரகாரத்தில் தல விருட்சங்களான வில்வ மரமும், வன்னி மரமும் காணப்படுகின்றன.

மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை மகா ருத்ர யாகம் நடைபெறுகிறது. உலக நன்மைக்காகவும், இயற்கை செழிக்கவும், அனைத்து ஜீவராசிகளும் எல்லா நன்மைகளும் பெற்று சிறப்பாக வாழவும் இந்த யாகம் செய்யப்படுகிறது. இந்த யாகத்தில் 1008 மூலிகைகள், பலவித தானியங்கள் இடப்படுகிறது. இந்த யாகத்தின் சாம்பல், வன்னி மரத்தடியில் கொட்டப்படுகிறது.

இத்தல இறைவனான பூமிநாதரை வழிபட்டு வந்தால் பூமி சம்பந்தமான சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. வீடு கட்ட விரும்புவோர், வாஸ்து தோஷம் உள்ளவர்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் இருந்து மூன்று பிடி மண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். பின்பு அந்த மண், பூ, பழங்களுடன் அர்ச்சனை தட்டில் வைத்து இறைவனுக்கு அர்ச்சிக்கப்படுகிறது.

Also Read
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்
பூமிநாதர்-அறம் வளர்த்த நாயகி

அர்ச்சனை முடிந்தபின், ஆலயத்தை மூன்று முறை சுற்றி வரவேண்டும். முதல் சுற்றின்போது, ஒரு பிடி மண்ணை வில்வ மரத்தடியிலும், இரண்டாம் சுற்றின்போது மற்றொரு பிடி மண்ணை வன்னி மரத்தடியிலும் போடுகிறார்கள். அப்போது, மகா ருத்ர யாகத்தின் சாம்பலில் ஒரு பிடி எடுத்துக்கொண்டு, மீதமிருக்கும் மண்ணோடு சேர்த்து வைத்துக்கொள்கிறார்கள். பின்பு மூன்றாவது முறை கோவிலை சுற்றி நவக்கிரகங்களை வழிபடுகிறார்கள்.

வீட்டிற்கு வந்ததும், கோவிலில் இருந்து கொண்டுவந்த சாம்பல் கலந்த மண்ணை வீட்டின் பூஜையறையில் வைத்துக்கொள்கிறார்கள். 5 நாட்களுக்கு பிறகு, அதில் பாதியை எடுத்து வீட்டில் இருந்து மண் எடுக்கப்பட்ட இடத்தில் போடவேண்டும். இவ்வாறு செய்தால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நடக்கும், வாஸ்து தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருச்சியில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்ணச்சநல்லூரில் இக்கோவில் அமைந்துள்ளது.

Also Read
பக்தர்களுடன் நெருக்கமாக உரையாடும் பெருமாள்
பூமிநாதர்-அறம் வளர்த்த நாயகி

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com