கடம்பாடி திருவதீஸ்வரர் கோவில்

மனோன்மணி உடனுறை திருவதீஸ்வரர் கோவிலில் தைப்பூசம், மகாசிவராத்திரி, திருக்கல்யாணம், சித்ரா பவுர்ணமி, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட பல உற்சவங்கள் நடைபெறுகின்றன.
கடம்பாடி திருவதீஸ்வரர் கோவில்
கடம்பாடி திருவதீஸ்வரர் கோவில்
Published on

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த கிராமம், கடம்பாடி. சரித்திரப் புகழ்பெற்ற மாமல்லபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த மனோன்மணி உடனுறை திருவதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

தல வரலாறு

கி.பி. 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. பிற்காலத்தில் வழிபாடுகள் குறைந்து, பொலிவை இழந்த இத்தலம், நாளடைவில் பூமிக்கடியில் புதைந்து போனது. கோவில் இருந்த பகுதியில் சில கற்கள் மட்டுமே ஆங்காங்கே இருந்துள்ளன.

2013-ம் ஆண்டில் இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், கோவிலை மீட்டெடுத்து புனரமைக்க முடிவு செய்தனர்.

அதன்படி, திருப்பணிகளுக்காக கோவில் வளாகத்தைத் தோண்டியபோது பூமிக்கடியில் இரண்டடி உயரம் கொண்ட சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய சமயக்குரவர்களின் சிலைகள் கிடைத்தன.

பின்னர், கோவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வழிபாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து ஈசனையும், அம்பாளையும் வழிபட்டுச் செல்கின்றனர்.

கோவில் அமைப்பு

கற்றளி வகை கோவிலாக காட்சி தரும் திருவகதீஸ்வரர் திருக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இருப்பினும், கோவிலின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிறிய நுழைவுவாசல் வழியாகவே பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழும் இத்தலத்தில் மகாமண்டபத்தின் தொடக்கத்தில் பலிபீடமும், நந்தியெம்பெருமான் சன்னிதியும் அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் உள்ள கருவறையின் வெளிப்புறத்தில் ஒருபுறம் பாலவிநாயகர் சன்னிதியும், மற்றொருபுறம் பாலமுருகன் சன்னிதியும் காணப்படுகின்றன.

கருவறையில் ஈசன் 'திருவதீஸ்வரர்' என்ற திருநாமம் தாங்கி லிங்க சொரூபமாக கிழக்கு நோக்கி எழுந்தருளி காட்சி தருகிறார். கருவறை வெளிக்கோட்டங்களில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை முதலான தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள். துர்க்கையின் எதிரில் சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது.

திருவதீஸ்வரர்- மனோன்மணி அம்பாள்
திருவதீஸ்வரர்- மனோன்மணி அம்பாள்

அம்பாள் மனோன்மணி தெற்கு திசை நோக்கி ஒரு தனிச் சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் சதுர்புஜ நாயகியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அம்பாளின் சன்னிதிக்கு முன்பாக பலிபீடமும், சிம்மமும் அமைந்துள்ளன.

அகத்தியர், கற்பக விநாயகர், தாண்டவமூர்த்தி, கால பைரவர் முதலானோர் சிறு சன்னிதிகளில் எழுந்தருளியுள்ளனர். இத்தலத்தில் ஐயப்பனுக்கு ஒரு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

Also Read
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
கடம்பாடி திருவதீஸ்வரர் கோவில்

திருவிழா

தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி மாதத்தில் திருக்கல்யாணம், சித்ரா பவுர்ணமி, ஆருத்ரா தரிசனம், ஆடிப்பூரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மாதப் பிரதோஷங்கள் முதலான பல உற்சவங்கள் இத்தலத்தில் தொடர்ந்து நடைபெறுகின்றன. வாழ்க்கையில் தொடர் தோல்விகளை சந்திப்பவர்கள், மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபட்டால் திருவகதீஸ்வரர் தொடர் வெற்றிகளையும், மன நிம்மதியையும் வழங்கி அருள்வார் என்பது நம்பிக்கை.

தினமும் ஒருகால பூஜை நடைபெறும் இத்தலமானது, காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.

அமைவிடம்

மாமல்லபுரம் - கல்பாக்கம் கிழக்குக் கடற்கரைச் சாலை மார்க்கத்தில் மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும், கல்பாக்கத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும் கடம்பாடி அமைந்துள்ளது.

Also Read
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்
கடம்பாடி திருவதீஸ்வரர் கோவில்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com