ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில்

மகிமாலீஸ்வரர் கோவில் விமானம், 35 அடி உயரத்துடன் நிழல் கீழே விழாதபடி அமைக்கப்பட்டுள்ளது.
மகிமாலீஸ்வரர்
மகிமாலீஸ்வரர்
Published on

ஈரோடு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, மகிமாலீஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலின் மூலவர் மகிமாலீஸ்வரர், தாயார் மங்களாம்பிகை ஆவர்.

ராவணன் வம்சாவளியினர்

இலங்கை மன்னன் ராவணன், சிவபெருமான் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்தான். அவன் வம்சாவளியில் வந்த மாலி, சுமாலி, மகிமாலி ஆகியோரும் சிவபக்தியில் சிறந்து விளங்கினர். ஒரு சமயம் இவர்கள் மூவரும் இமயமலைக்கு யாத்திரை சென்று நாடு திரும்பினர். சிவபக்தர்கள் அந்திப்பொழுதில் சந்தியாவந்தனம் செய்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் அவர்கள் மூவரும் இத்தலம் வரும்போது, அந்திப்பொழுது ஆனது. அதனால் அவர்கள் காவிரி தென்கரையில் ஆறடி உயரமுள்ள மகாலிங்க மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, சந்தியாவந்தன பூஜையை முடித்தனர்.

பிற்காலத்தில் இங்கு கோவில் எழுப்பப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் 'மகிமாலீஸ்வரம்' என்று அழைக்கப்படுவதோடு, இறைவன் 'மகிமாலீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

மகிமாலி மன்னன்

மற்றொரு வரலாறுபடி, ஒரு காலத்தில் பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதிகள் பல்லவ மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அச்சமயம் இப்பகுதியை இருக்குவேளிர் வம்சத்தை சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.10-ம் நூற்றாண்டில் சோழ ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதிகளை ஆட்சி செய்த மகிமாலி இருக்குவேள் என்ற மன்னன் இக்கோவிலை கட்டி வழிபட்டதாக கூறப்படுகிறது. எனவே தான் இத்தலம் 'மகிமாலீஸ்வரம்' என அழைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

ஒரு சமயம் சுந்தரமூர்த்தி நாயனார், தனது மனைவியர்களான பறவையார், சங்கிலியார் ஆகியோருடன் இத்தலம் வந்து மகிமாலீஸ்வரரை நினைத்து வழிபாடு செய்தார். அப்போது சிவத்தொண்டில் இருந்த சேரமான் பெருமான் நாயனார் என்ற சிற்றரசன், அவர்கள் மூவருக்கும் கவரி வீசி சேவை செய்துள்ளார். இந்த காட்சி கோவிலில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

ஆலய அமைப்பு

இந்த ஆலயம் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. முக மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. கருவறையில் சிவபெருமான் மகிமாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் லிங்கமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி அளிக்கிறார்கள்.

அர்த்த மண்டபத்தில் விநாயகர், பால தண்டாயுதபாணி, தாயார் மங்களாம்பிகை ஆகியோரும் அருள் பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் சரஸ்வதி, வீரபத்திரர், சப்த கன்னியர்கள், பைரவர், கணபதி, சுப்பிரமணியர், சந்திரன், சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார்கள். கோவில் விமானம், 35 அடி உயரத்துடன் நிழல் கீழே விழாதபடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு 63 நாயன்மார்கள் சிலைகளும், 16 வகை சிவலிங்கத் திருமேனிகளும் உள்ளது சிறப்பாகும்.

திருவிழா

இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை சதய நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தைப்பேறு வேண்டுபவர்கள், கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் இத்தல இறைவனை வழிபடுகிறார்கள்.

ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com