

இந்தியாவின் வடக்கு எல்லைப்பகுதியில் உள்ள சுற்றுலா நகரம் சிம்லா. இங்கே உள்ள மிக உயர்ந்த மலையான ஜாகு மலையில் ராமாயணத்தோடு தொடர்புடைய பழமையான அனுமன் கோவில் ஒன்று இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 455 மீட்டர் உயரத்தில் (8,054 அடி) அமைந்துள்ளது இக்கோவில்.
ராமரின் தீவிர பக்தராக மட்டுமின்றி, அவருக்கு முதன்மைத் தூதுவனாகவும் செயல்பட்டவர், அனுமன். இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்காக, ராவணனுடன் போர் புரியும் சூழல் ராமனுக்கு ஏற்பட்டது. ராம-லட்சுமணர்களின் பக்கம் சுக்ரீவன் மற்றும் அனுமன் தலைமையிலான வானரப்படை இருந்தது. போரின்போது லட்சுமணன், ராவணனின் மகனான மேகநாதனுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். அப்போது மேகநாதன் மறைந்திருந்து எய்த நாகபாணம், லட்சுமணனைத் தாக்கியதில் அவர் மூர்ச்சையடைந்தார். லட்சுமணனின் உயிரைக் காப்பாற்ற இமயமலைப்பகுதியில் உள்ள சஞ்சீவினி என்னும் மூலிகை மருந்தைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அந்த மூலிகையை விரைவாக எடுத்துவர, காற்றை விட வேகமாகப் பயணிக்கும் அனுமனால்தான் முடியும் என்பதால், அவரைத் தேர்வு செய்து அனுப்பினர். அப்படி இமயமலை நோக்கிச் சென்ற அனுமன், ஜாகு மலையில் வசித்து வந்த யட்ச முனிவர் வாழ்ந்த இடத்தில் தவழ்ந்த அமைதியை விரும்பி, அங்கே சில நிமிடம் இளைப்பாறினார் என்று புராணத் தகவல் கூறப்படுகிறது.
அந்த இடத்தில் பின்னாளில் அப்பகுதி மக்கள், அனுமனுக்காக சிறப்பு வாய்ந்த ஆலயம் ஒன்றைக் கட்டியுள்ளனர். இந்த ஆலயம் 17-ம் நூற்றாண்டு முதலே இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மலைக் கோவிலை கழுகுப் பார்வையில் பார்க்கும்போது, செந்நிறம் பூசியதுபோல் காட்சியளிக்கும். அனுமனுக்கு மிகவும் பிடித்தது செந்தூரம் என்பதால், இந்த மலையில் அமைந்துள்ள கோவில்கள் உள்பட அனைத்துக் கட்டிடங்களும் செந்நிறத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த மலைக் கோவிலுக்குச் சிகரம் வைத்ததுபோல் அமைந்திருக்கிறது, 108 அடி உயரம் (33 மீட்டர்) உள்ள கம்பீரமான அனுமன் சிலை.
இந்தக் கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமியை ஒட்டி திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
இக்கோவிலை அடைய, மலை மீது நடைபயணமாக செல்லலாம். சிம்லாவில் உள்ள 'தி ரிட்ஜ்' பகுதியிலிருந்து 2 கி.மீ. செங்குத்தான மலைப்பாதையில் ஏற சுமார் 30-45 நிமிடங்கள் ஆகும். குதிரை சவாரியின் மூலமும், ரோப் கார் மூலமும் செல்ல வசதிகள் இருக்கின்றன. கார்களும் மலையின் மேல் குறிப்பிட்ட பகுதிவரை செல்ல வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
இயற்கை சூழ்ந்த இடமாக இந்த மலையும், கோவிலும் இருக்கின்றன. ஆன்மிக அனுபவத்தை பெறவும், இயற்கையை ரசிப்பதற்காகவும் இங்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர். கோவிலை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சியையும் பலரும் மேற்கொள்கிறார்கள்.
சண்டிகர், டெல்லி, டேராடூன் மற்றும் கல்கா போன்ற முக்கிய நகரங்களில் இருந்து சிம்லாவுக்கு சாலை வசதி உள்ளது. கார்கள், பேருந்துகள் மூலமாக சிம்லாவுக்கு எளிதாக செல்லலாம். விமானம் மூலம் செல்ல விரும்புவோர், சிம்லாவிலிருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக கோவிலை அடையலாம்.
கோவிலுக்கு அருகிலுள்ள ரெயில் நிலையம் சிம்லா ரெயில் நிலையம் ஆகும்; டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலிருந்து இங்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமான கல்கா-சிம்லா 'டாய் ட்ரெயின்' (toy train) மூலமாகவும் கல்காவிலிருந்து சிம்லாவை அடையலாம்.