

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ளது, கலியுக வரதராஜப் பெருமாள் கோவில். இந்த ஆலயம் ‘கல்லங்குறிச்சி கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் பெருமாள், உருவம் இல்லாமல் 12 அடி உயர கம்பத்தில் நாமம் அணிந்து அருள்பாலிக்கிறார். இந்த கம்பத்தையே மூலவராக கருதி பூஜை நடைபெற்று வருகிறது.
முன்னொரு காலத்தில், சீதளவாடி என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்ட கோபாலன் என்பவர், தன் தாய்மாமன் ஊரான கடுகூரில் வாழ்ந்து வந்தார். கோபாலன், தனக்காக சொந்த வீடு வேண்டும் என்று விரும்பினார். அதன்படி, கடுகூருக்கு அருகே உள்ள மேல்பாடி என்ற ஊரின் தென்பகுதியில் காடுகளை திருத்தி, தனக்கும், தன்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கும் வீடுகளை கட்டிக்கொண்டார். பின்பு, வேளாண் நிலைங்களை உருவாக்கி, விவசாயம் செய்து வந்தார். கோபாலன் உருவாக்கிய அவ்வூருக்கு 'கோபாலன் குடிக்காடு' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி, தற்போது 'கோப்பிலங்க குடிகாடு' என்று அழைக்கப்படுகிறது.
விவசாயம் செய்தபடியே மாடுகள் வளர்ப்பிலும் கோபாலன் கவனம் செலுத்தினார். இதையடுத்து, ஒரு பெரிய மாட்டு மந்தையை உருவாக்கி, பராமரித்து வந்தார். கோபாலனுக்கு பின்பு, மாடுகளை பராமரிக்கும் பொறுப்பை அவனது மகன் மங்கான் ஏற்றுக்கொண்டான்.
ஒரு நாள் மாட்டு மந்தையில் இருந்து பசு ஒன்று காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் பசுவை கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்று நாள் கழித்து மங்கான் கனவில் ஒரு துறவி தோன்றி, “கவலைப்படாதே, காட்டின் மேற்கு பகுதியில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்திற்கும், மகாலிங்க மரத்திற்கும் இடையே உன்னுடைய பசு நிற்கிறது” என்று கூறினார்.
விடிந்ததும், குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, காணாமல் போன பசு, சாய்ந்து விழுந்த ஒரு கம்பத்தின் மீது பால் சொரிந்து கொண்டிருந்தது. இதைக்கண்டு வியந்த மங்கான், பசுவை வீட்டிற்கு ஓட்டிச் சென்றான்.
அன்றிலிருந்து ஏழாம் நாள், மங்கான் கனவில் மீண்டும் தோன்றிய துறவி, “பொய் பொருளான பசுவை அழைத்துக் கொண்டு, மெய்ப் பொருளான என்னை விட்டுவிட்டாயே! சீதளவாடியில் வாழ்ந்த உன் முன்னோர், பெருமாளுக்கு கோவில் கட்ட எண்ணி, கற்கம்பம் ஒன்றை கொண்டு வரும் வழியில் வண்டி அச்சு முறிந்தது. இதனால் உடைந்த கம்பத்தை அங்கேயே விட்டுச் சென்றனர். அந்த கம்பத்தையே நீ கண்டாய். அந்த கம்பத்தை நிலைநிறுத்தி என்னை வழிபடு. கலியுக மக்களை காக்க வந்தவனே நான்" என்று கூறி மறைந்தார்.
மறுநாள் தான் கண்ட கனவு பற்றி ஊர் மக்களிடம் கூறினான், மங்கான். பின்னர், மக்கள் அனைவரும் அந்த கற்கம்பத்திற்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். கற்கம்பத்திற்கு 'கலியுக வரதராஜப் பெருமாள்' என்றும் பெயர் சூட்டினர். இதையடுத்து கோவில் எழுப்பி, உற்சவர் சிலைகளும் வைக்கப்பட்டன.
கோவில் கருவறையில் மூலவரான பெருமாள், 12 அடி உயர கம்பத்தூணாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கம்பத்தின் கீழே ஆஞ்சநேயர் இருக்கிறார். ஆஞ்சநேயர் ருத்ர அம்சம் கொண்டவராய், கம்பத்தை தாங்கி பிடிப்பது போன்று காட்சி தருகிறார். இந்த கம்பத்திற்கே பூஜைகள் நடைபெறுகின்றன. பெருமாள், கம்பத்தில் இருப்பதால், தாயாருக்கு சன்னிதியோ, உருவமோ இல்லை.
பெருமாளுடன் தாயார் இணைந்திருப்பதாக ஐதீகம். எனவே, உற்சவ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோவிலில் உள்ள தசாவதார மண்டபத்தில் தசாவதாரங்களின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இது தவிர வேறு சிலைகளோ, சன்னிதிகளோ இல்லை. கோவில் தல விருட்சமாக மகாலிங்க மரம் உள்ளது.
கோவிலுக்கு வரும் விவசாயிகள், விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு தானியப் பொருட்களை கோவிலுக்கு காணிக்கையாக தருவதாக வேண்டிக் கொள்கிறார்கள். அதன்படி வேண்டுதல் நிறைவேறியதும், கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தானிய கிடங்குகளில், தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
இக்கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் நண்பகலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. அன்றைய நாள் முழுவதும் கோவில் திறந்திருக்கும். சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப் பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, அனுமன் ஜெயந்தி, தைப்பொங்கல் போன்ற விழாக்களும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
அரியலூரில் இருந்து கடுகூர் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் கலியுக வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.