ஜெர்மனி காமாட்சி அம்பாள் ஆலயம்

ஜெர்மனி காமாட்சி அம்பாள் கோவிலில் பிரம்மோற்சவம், தேரோட்டம் ஆகிய விழாக்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன.
பல்லவர் காலந்தொட்டு, இந்து சமய ஆலயங்கள் இந்தியாவையும் கடந்து, இலங்கை, மலேசியா, ஜாவா, சுமத்திரா, கம்போடியா என பல்வேறு நாடுகளிலும் எழுப்பப்பட்டுள்ளன. அந்த வகையில், ஜெர்மனி நாட்டின் ஹம் நகரின் எல்லைக்குட்பட்ட உன்ட்ராப் என்ற ஊரில் அமையப்பெற்றுள்ளது ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம். மத்திய ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய தென்னிந்திய பாணி இந்து கோவில் இதுவாகும்.
தமிழர் கட்டிய ஆலயம்
இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் என்ற அருளாளர். அன்னை காமாட்சியின் திருவருளால் இவர் ஆட்கொள்ளப்பட்டு, ஆன்மிகப் பாதையில் பயணம் செய்து சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கர குருக்கள் என்ற திருநாமத்தோடு, ஜெர்மனி நாட்டில் வசித்தபடி, அங்கே உருவாக்கிய திருக்கோவிலே ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமாகும்.
இலங்கை போர்ச்சூழல் காரணமாக, 1986-ம் ஆண்டு இவர் பிரான்சு நாட்டிற்குப் பயணம் செய்தபோது, நண்பரின் வேண்டுகோளின்படி, ஜெர்மனி நாட்டின் ஹம் நகரில் தங்க நேர்ந்தது. அவர் தங்கியிருந்த இடம் அயல்நாடு என்றாலும், காமாட்சி வழிபாட்டினை தொடர்ந்து செய்து வந்தார்.
அந்தப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் உள்ள ஒரு அறையை கோவிலாக்கினார். அந்த அறையில் விநாயகர், முருகன் போன்ற சாமி படங்களை வைத்து பூஜை செய்து வந்தார். இதையறிந்த அப்பகுதிவாழ் தமிழர்களும் அங்கு வந்து வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
தடங்கல்
1989-ம் ஆண்டு மற்றொரு இடத்தில் படங்களை வைத்து வழிபட்டபோது, அங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதையடுத்து அவ்வூரில் தனி ஆலயம் அமைக்க சுவாமிகளுக்கு ஆவல் ஏற்பட்டது. அதேசமயம், இங்கு நடைபெறும் பூஜைகளின் ஓசைகள் இடையூறாக இருந்ததால், அப்பகுதி மக்கள் அரசிடம் புகார் செய்தனர். இதனால் அரசு அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை செய்து ஆலயத்தை மூடலாமா? என்று கேட்டனர். அப்போது சுவாமிகளின் பதிலுரையைக் கேட்ட அதிகாரிகள் மனமுவந்து, ஹம் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உன்ட்ராப் கிராமத்தில் ஆலயத்திற்காக இடம் ஒதுக்கி தந்தனர்.
அடியார்களின் பொருளுதவியோடு அவ்விடத்தை விலைக்கு வாங்கிய சுவாமிகள் அங்கேயே ஆலயம் எழுப்பத் தொடங்கினார். கோவில் எழுப்புவதற்கு, இந்திய ரூபாயின் மதிப்பில் பதினைந்து கோடி தேவைப்பட்டது. அடியார்களின் பொருளுதவி மற்றும் வங்கியின் கடனுதவி ஆகியவற்றால் பல்வேறு தடைகளைத் தாண்டி முழுத் தொகையும் கிடைக்கப்பெற்று ஆலயம் எழுப்பப்பட்டது. ஆலய பணிகள் நிறைவடைந்து 2002-ம் ஆண்டு மே மாதம் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
காமாட்சி அம்மன்
தொடக்கத்தில் படங்களை வைத்து வழிபட்டு வந்த நிலையில், ஜெர்மனியில் வசித்து வரும் பரம் வசந்தி என்பவரிடம் இருந்து காமாட்சி சிலை ஒன்று கிடைக்கப்பெற்று, அதை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு ஆலயம் எழுப்பும் கட்டத்தில், இந்தியாவில் இருந்து சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு, ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்தியாவிற்கு சுவாமிகள் வருகை தந்தபோது ஒரு சிற்பக் கூடத்திற்கு சென்றார். அங்கிருந்த காமாட்சி அம்மன் சிலையைக் கண்டதும், அது காஞ்சி காமாட்சியின் மறுவடிவமாகவே இருந்ததைக் கண்டு வியப்படைந்தார். அச்சிலை ஜெர்மனி செல்வதற்காக செய்தது என்று கூறியபோது, திருவருளை நினைத்து மெய் சிலிர்த்தார். ஆனால், அந்தச் சிலையை வாங்க பணமில்லாத நிலையில், அரை மனதோடு ஜெர்மனி வந்து சேர்ந்தார். அதன்பின்னர், நெடுந்தீவைச் சேர்ந்த தில்லையம்பலம் குடும்பத்தார், உரிய தொகை கொடுத்து அந்தச் சிலையை ஜெர்மனிக்கு வரவழைத்தனர். அதுவே இன்று ஜெர்மனியின் காமாட்சியாக அருளாட்சி செய்து வருகிறது. இச்சிலை காஞ்சி காமாட்சியின் மறு வடிவமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஆலய அமைப்பு
உன்ட்ராப் கிராமத்தில் கிழக்கு முகமாய் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்ததும், கொடிமரம், அதனடியில் கொடிமர விநாயகர், இடதுபுறம் விநாயகர் சன்னிதி, சிவபெருமான் சன்னிதி, வள்ளி தெய்வயானையுடன் முருகப்பெருமான் வீற்றிருக்கும் சன்னிதி, லட்சுமி நரசிம்மர் சன்னிதி, கோமுகத்தின் எதிரே சண்டிகேசுவரி, வசந்தமண்டபம், சோமாஸ்கந்தர் சன்னிதி, நவக்கிரக சன்னிதி, ஐயப்பன் மற்றும் பைரவர் சன்னிதிகள் ஆகியவை அமைந்துள்ளன.
இந்த சன்னிதிகளுக்கு நடுநாயகமாக அன்னை காமாட்சியின் கருவறை அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். ஆலயத்தின் மேற்கே மூன்று நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே தனிச் சன்னிதியில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். கோவிலின் வெளியே திருத்தேர் மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திருக்கோவிலுக்குத் தெற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் டால்ட்டென் கனால் என்ற ஜீவநதி ஓடுகிறது. இந்த நதியில்தான் இவ்வாலயத்தின் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
விழாக்கள்
ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், தமிழ்ப்புத்தாண்டு, சித்திரா பவுர்ணமி, திருவாதிரை, நவராத்திரி, தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இது தவிர ஜூன் மாதத்தில் கோவிலின் பிரம்மோற்சவமும், ஜூலையில் தேரோட்டத் திருவிழாவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும், அவ்வப்போது தேவி மகாத்மிய ஹோமமும் நடைபெறுகிறது. இந்த ஆலயம் ஆன்மிகத்தில் முறையாக செயல்பட்டு வருவதுடன், சமுதாய சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
தரிசன நேரம்
காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம்.
அமைவிடம்
ஜெர்மனி நாட்டின் மேற்கு மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பேலியா மாநிலத்தில் உள்ள ஹம் நகரின் அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைதியான உன்ட்ராப் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சர்வதேச நகரமான பிராங்க்பட் நகரில் இருந்து வடமேற்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், டியுசல் டார்ப் நகரத்தில் இருந்து கிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவிலும் ஹம் நகரம் அமைந்துள்ளது. விமானம் நிலையம் அமைந்துள்ள இந்த இரு நகரங்களிலிருந்தும், ரெயில் மூலமாகவும், சாலை வழியாகவும் ஹம் நகருக்கு எளிதில் செல்ல முடியும். அங்கிருந்து இந்த ஆலயத்தை எளிதில் அடையலாம்.