கருக்ககம் சாமுண்டி தேவி கோவில்

கருக்ககம் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்மனை சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று விதமாக பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
கருக்ககம் சாமுண்டி தேவி கோவில்
கருக்ககம் சாமுண்டி தேவி கோவில்
Published on

கேரள நாட்டை ஆட்சி செய்த சேர மன்னர்கள், சிவன் கோவில்களுடன், அன்னை பராசக்தியை பகவதியாக, அம்மனாக சாமுண்டிதேவியாக பல இடங்களில் நிறுவி, அந்த அம்மன்களை, அந்தந்த ஊர்களின் பெயருடன் இணைத்து அழைத்து வழிபட்டு வந்தனர்.

இப்படி கரிக்ககம் என்ற இடத்தில் உருவானதுதான், தேவி கரிக்கத்தம்மா' என்று அழைக்கப்படும். கரிக்ககம் சாமுண்டி தேவி கோவில் சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான இந்த ஆலயம், பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இவ்வாலயத்தில் உக்கிர சொரூபிணியாக வீற்றிருக்கும் ரத்த சாமுண்டி அம்மன், சத்தியத்தை நிலைநாட்டும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.

திருவிதாங்கூர் மன்னனின் படையில் களரி சண்டை பயின்ற நிபுணர்களின் களரிக்களமாக இந்த இடம் விளங்கி இருக்கிறது. களரிக்களம் என்பதே மருவி, 'கரிக்ககம்' என்றான தாகவும் சொல்கிறார்கள்.

கருக்ககம் சாமுண்டி தேவி கோவில்
கருக்ககம் சாமுண்டி தேவி கோவில்

தல வரலாறு

வேதங்களைக் கற்றறிந்த ஞானி ஒருவர், யோகிஸ்வரன் என்பவரை தன்னுடைய சீடனாக ஏற்று, அவருக்கு பல போதனைகளையும். அருள்வாக்கையும் அருளினார். தன் குருவைப் போல யோகீஸ்வரனும், பராசக்தியை வழிபாடு செய்து வந்தார்.

ஒருமுறை யோகீஸ்வரனின் முன்பு, ஒரு சிறுமி வடிவத்தில் பராசக்தி தோன்றினாள். அந்த சிறுமியை, குருவும் சீடனுமாக சேர்ந்து தற்போது கரிக்ககம் ஆலயம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, பச்சைப் பந்தல் அமைத்து குடியமர்த்தினர்.

அப்போது அந்த சிறுமி, அவர்களுக்கு அம்பிகையாக காட்சியளித்து, "நான் இங்கேயே குடிகொள்வேன்" என்று கூறி மறைந்தாள். இதையடுத்து குருவின் ஆலோசனைப்படி யோகீஸ்வரன், ஒரு அம்மன் சிலையை சிறுமி மறைந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். அந்த அம்மனே தற்போது 'கரிக்ககம் சாமுண்டியாக அருள் பாலிக்கிறார். இந்த அம்மனை 'பராசக்தி' என்றும். 'பகவதி' என்றும், 'பரமேஸ்வரி' என்றும் மக்கள் வழிபடுகின்றனர்.

இத்தல அம்மனை சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று விதமாக பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச் சிறப்பு.

இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி இருவரும் சுவர் சித்திரங்களாகவே உள்ளனர். இந்த சன்னிதியில் எந்த சிலை வடிவமும் இல்லை. ஆலய கருவறையில் சாமுண்டி தேவியை விக்ரகமாக வழிபாடு செய்கின்றனர். தீராத நோய் நீங்கவும், வாழ்வில் அமைதி நிலவவும் இந்த அன்னையை வழிபடுகிறார்கள். இந்த அம்மனுக்கு 'கடும் பாயசம்' நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ரத்த புஷ்பார்ச்சனை, சுயம்வரார்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை போன்றவை செய்யப்படுகிறது. பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்வார்கள்,

காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், உடனடியாக தேவிக்கு நடத்தப்படும் வழிபாடு பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகும். நினைத்த காரியம் நிறைவேறவும், தடைகள் விலகவும் தொடர்ச்சியாக 13 வெள்ளிக்கிழமைகள், சாமுண்டி தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுவது ஐதீகமாக உள்ளது. உடல் நலன் வேண்டியும், பயம் விலகவும் இந்த ஆலயத்தில் 'கருப்பு கயிறு' மந்திரித்து கட்டப்படுகிறது. இந்த தாயந்து, தேவியின் பாதங்களில் 21 தினங்கள் வைத்து பூஜை செய்து கொடுக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தில் மகா கணபதி, யக்க்ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி நாகர்வனம், சாஸ்தா, குரு பகவான், யோகீஸ்வான், அன்ன பூர்ணேஸ்வரி ஆகிய உப சன்னிதிகளும், நவக்கிரகங்களும் காணப்படுகின்றன.

இங்கு ஆண்டுதோறும் தேவியின் நட்சத்திரமான பங்குனி மாதம் மக நட்சத்திர தினத்தில் பொங்கல் விழா நடைபெறும். விழாவின் 7-ம் நாளில் பொங்கல் விழா நடத்தப்படும் இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அன்னையை வழிபாடு செய்வார்கள்.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது கரிக்ககம் சாமுண்டி கோவில். திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com