மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில்

மயில்ரங்கம் கோவிலில் பிரசாதமாக மரகத லேகியமும், தையல் நாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மூலிகை தைலமும் வழங்கப்படுகிறது.
தையல்நாயகி உடனமர் வைத்தியநாதீஸ்வரர்
தையல்நாயகி உடனமர் வைத்தியநாதீஸ்வரர்
Published on

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா வெள்ளக்கோவில் அருகே, அமராவதி ஆற்றின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம் மயில்ரங்கம். இங்குள்ள அமராவதி ஆற்றங்கரையோரத்தில் தையல்நாயகி உடனமர் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இங்குச் சிவபெருமான் வைத்தியநாதராக வீற்றிருந்து மக்களின் பிணிகளை அகற்றி வருகிறார். கோவிலை சுற்றி பல கல்வெட்டுகள் உள்ளன. இதன் மூலம் கோவிலின் தொன்மை மற்றும் சிறப்புகளை அறிய முடிகிறது.

தல சிறப்பு

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்துவிட்டு முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அமராவதி ஆற்றங்கரையோரத்தில் உள்ள தந்தை சிவனிடமும், தாயார் தையல்நாயகியிடமும் ஆசி பெறுவதற்காக முருகப் பெருமான் மயிலில் வந்து இறங்கினார். அவ்வாறு முருகப்பெருமான் மயிலில் வந்து இறங்கிய இடமே 'மயில்ரங்கம்' என்று மருவிவிட்டது என்கின்றனர் பக்தர்கள். இதனை குறிக்கும் வகையில், கோவிலில் மயில் வாகனம் ஒன்று வடக்கு நோக்கி அமைந்துள்ளது.

திருஞானசம்பந்தர், அவருடைய சீடர்களால் பாடல் பெற்ற தலம் இதுவாகும். கந்தபுராணத்தின் 13-வது அத்தியாயத்தில் இந்த கோவில் பற்றிய தகவல் இடம் பெற்றிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் சப்தஸ்வரங்களுடன் கூடிய 90 கல் தூண்களை கொண்ட மிகப்பெரிய மகா மண்டபம் இந்தக் கோவிலில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இது, பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், அதற்கு சான்றாக மீன் சின்னம் கோவில் மண்டபத்தின் மேல்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.

தூண்களின் ஒவ்வொரு பகுதியும், வெவ்வேறு விதமான இசையை தருகின்றன. இங்குள்ள தூண்களில் 100-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகுராஜ பெருமாள், நம்மாழ்வார், பெரியாழ்வார், கருடாழ்வார், வாலில் மணியுடன் ஆஞ்சநேயர், விநாயகர், தண்டாயுதபாணி, சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை அம்மன், சனீஸ்வர பகவான், நவக்கிரகங்கள், சந்திர பகவான், கால பைரவர் உள்ளிட்ட சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றனர்.

மரகத லேகியம் பிரசாதம்

வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரசாதமாக மரகத லேகியமும், தையல் நாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மூலிகை தைலமும் வழங்கப்பட்டு வருகிறது. கொங்கு மண்டலத்தில் ஐம்பொன் சிலைகள் அதிகம் கொண்ட 2-வது

கோவில் இதுவாகும். அம்மன் சன்னிதியில் 2 சுரங்கப் பாதைகள் உள்ளன. பாதுகாப்பு கருதி தற்போது அந்த பாதைகளை மூடி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பூஜைகள்

கோவிலில் சிவன் சன்னிதிக்கும், பார்வதி சன்னிதிக்கும் நடுவில் ஆறுமுகங்களுடன் வள்ளி - தெய்வானையுடன் முருகன் அருள்பாலித்து வருகிறார். ஆறு முகத்துடன் முருகன் உள்ள கோவிலில் மட்டும்தான் சத்ரு சம்ஹார பூஜை நடைபெறும். அதன்படி இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இந்த பூஜையில் கலந்துகொண்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தைப்பேறு உண்டாகும், செவ்வாய் தோஷத்துக்கு பரிகாரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

வள்ளி-தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான்
வள்ளி-தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான்

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. சனிப் பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு வந்து வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

அமைவிடம்

வெள்ளக்கோவிலில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பூரில் இருந்து 58 கிலோமீட்டர் தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 63 கிலோமீட்டர் தொலைவிலும், கோவையில் இருந்து 106 கிலோமீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com