

கொங்குநாட்டில் உள்ள புகழ் பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றாக நைனாமலை வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள செங்குத்தான மலை மீது இக்கோவில் அமைந்துள்ளது.
நயன மகரிஷி எனும் சித்தர் இங்கு தவம் மேற்கொண்டு பெருமாள் தரிசனம் பெற்றதால் இம்மலைக்கு 'நைனாமலை' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இது 'நைனாசலம்' என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்துள்ளன. ஆனால் தற்போது அமையா தீர்த்தம், அரிவாள் தீர்த்தம், பெரிய பாழி தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன.
இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகவும், சிலர் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் கூறுகிறார்கள். சுமார் 2,500 அடி உயரத்தில் அமைந் துள்ள இக்கோவிலை அடைவதற்கு கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமான படிகளை ஏறிச் செல்ல வேண்டும். மலை முடியும் இடத்துக்கு பத்து படிகளுக்கு கீழே ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு மேலே ஏறிச் சென்றதும் இறைவன் சன்னிதி வந்துவிடும்.
பெருமாள் சன்னிதிக்கு முன்பாக கொடிமரம் உள்ளது. அதன் அருகில் 'பெரிய திருவடி' எனப்படும் கருடாழ்வார் இறைவனை கைகூப்பி வணங்கியபடி காட்சி தருகிறார். கருவறையில் வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி தாயாருடன் கையில் தண்டம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருவறைக்கு வெளியே உள்ள மண்டப தூணில் நயன மகரிஷி தவம் செய்வது போன்ற சிற்பம் உள்ளது.
பெருமாளை தரிசித்ததும், வெளியே உள்ள தனிச் சன்னிதியில் அன்னை குவலயவல்லி தாயார் அருள்பாலிக்கிறார். ஆண்டாளுக்கும் தனிச் சன்னிதி உள்ளது. மகாமண்ட பத்தில் ராமர், சீதை, லட்சு மணன் ஆகியோரும், ராதா, ருக்மணி சமேதராக வேணுகோபாலரும், நவநீத கிருஷ்ணரும் உள்ளனர்.
கோவிலுக்கு வெளியே மிகவும் பழமை வாய்ந்த கல் மண்டபம் ஒன்று உள்ளது. அந்த மண்டப தூண்களில் படுக்கை ஜடாமுடி சித்தர், பிராண தீபிகை சித்தர், குருலிங்க சித்தர் போன்ற சித்தர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இந்த சித்தர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டு செல்வதாகவும் நம்பப்படுகிறது. இக்கோவிலின் தல விருட்சமாக நெல்லி மரம் உள்ளது.
இத்தல இறைவனை சூரிய பகவான் வழிபட்டு வரம் பெற்றதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், உத்ராயண புண்ணிய காலமான தை முதல் ஆனி மாதம் வரை சூரியக் கதிர்கள் மூலவரின் முகத்தில் விழுவது சிறப்பாகும். இங்குள்ள பெருமாளை வழிபட்டால் திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே இத்தலம் 'சின்னத் திருப்பதி' என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்திர பகவான் இங்குள்ள வரதராஜப் பெருமாளை அருவமாக வந்து வழிபடுவதாகவும் நம்பப்படுகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி உற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இங்குள்ள பெருமாளை வழிபடுவது சிறப்பாகும். அதிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை மிகவும் விசேஷம்.
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிலும், சேந்தமங்கலத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் நைனாமலை வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.