

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள சக்திமலையில் அமைந்துள்ளது வெற்றி வேல் முருகன் கோவில். இங்கு அருள்பாலிக்கும் முருகப் பெருமான், தனது இடது பாகத்தில் மயில் இறகு வைத்திருப்பது அபூர்வ தோற்றமாகும்.
தல வரலாறு
ஒரு காலத்தில் இப்பகுதி, செழிப்பான மரங்கள் நிறைந்து காணப்பட்டது. இங்கு ஒரு மரத்தின் அடியில் சுயம்பு சிலை ஒன்று இருந்தது. இந்த சுயம்பு மூர்த்தத்தை ஒரு மயிலும், நாகமும் தினமும் பூஜித்து வந்தன. இவ்வாறு தொடர்ந்து ஆறு மாத காலம் நடந்தது. இதை கவனித்த மாடு மேய்க்கும் சிறுவர்கள், ஊர் பெரியவர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிறுவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு ஊர் மக்கள் சென்று பார்த்தனர். அப்போது சிறிது தூரத்தில் மயிலும், நாகமும் சுயம்பு மூர்த்தத்துக்கு பூஜை செய்வதைக் கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பின்னர் மயிலும், நாகமும் அவ்விடத்தை விட்டு சென்றதும், அருகில் சென்று அந்த மூர்த்தத்தை தொழுது வணங்கினர். மயிலும், நாகமும் பூஜித்ததால், அந்த சுயம்பு மூர்த்தம், முருகப்பெருமானாகத்தான் இருக்கும் என எண்ணினர்.
பின்னர் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, அவ்விடத்தில் முருகப் பெருமானுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். அதன்படி சிறிய கோவிலாக கட்டி, சுயம்பு மூர்த்தத்தை வைத்து வழிபட்டு வந்தனர். அதன் பிறகு சுயம்பு மூர்த்தத்திற்கு பின்னால் புதிய கற்சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். காலப்போக்கில் பக்தர்களின் உதவியுடன் அர்த்த மண்டபம், மகாமண்டபம் என கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
சோமாஸ்கந்த வடிவில் அமைக்கப்பட்டுள்ள இக்கோவில், பல சிறப்புகளை கொண்டுள்ளது. மூலவரான முருகப்பெருமான், 'வெற்றிவேல் முருகன்' எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இவர், இடதுபுறத்தில் மயில் இறகுடன் காட்சி தருவது அரிய தோற்றமாகும். பொதுவாக முருகன் தலங்களில், முருகப் பெருமான் சிலையானது கையில் தண்டாயுதத்துடன் நிற்பது போன்று வடிக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில், கையில் வேலுடன் இருப்பது போன்ற முருகன் சிலை வடிக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பாகும்.
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் காணப்படுகிறார்கள். இக்கோவிலில் ஆதி விநாயகர், பைரவர், சொர்ணபுரீஸ்வரர், சொர்ணாம்பிகை, சண்டிகேஸ்வரர், நாகர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.
இக்கோவிலில் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் போன்ற விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. உடல்நலம் பாதித்தவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து மயில் பீலியால் தடவி, திருநீறு பூசினால் விரைவில் உடல்நலம் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
குடும்பப் பிரச்சினை, கோர்ட்டு வழக்கு உள்ளவர்கள் முருகனுக்குரிய 'சத்ரு சம்ஹார திரிசத அர்ச்சனை' செய்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள். செவ்வாய் தோஷம், நாக தோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.
கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும், குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவிலும் வெற்றிவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது.