சிவனுக்காக கூத்தாடிய பிள்ளையார்

கருவறையில் கூத்தாடும் பிள்ளையார், வலது திருவடியை தூக்கி, இடது திருவடியை மூஞ்சுரு வாகனத்தின் மீது பதித்து, கிழக்கு நோக்கி நர்த்தனம் புரிந்தது போல் காட்சி தருகிறார்.
சிதம்பரம் பெரியார் தெருவில் சிறப்புவாய்ந்த நர்த்தன விநாயகர் என்று அழைக்கப்படும் கூத்தாடும் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் புராண காலங்களோடு தொடர்புடையது.
தல புராணம்
உலகையே ஆட்டி வைக்கும் நடராஜமூர்த்தி சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம் செய்தருள்கிறார். ஒரு சமயம் துர்வாச முனிவர், 'அன்னம்பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்' என்று ஆன்றோர்கள் கூறிய திருவாக்கு நிஜமா என்று சோதிக்க, அர்த்த ஜாம பூஜைகள் முடிந்த பிறகு மேற்கு வாசல் வழியாக தில்லைக்கு விஜயம் செய்தார்.
அர்த்த ஜாமம் முடிந்தவுடன் கோவில் நடை மூடப்பட்டு விட்டதால், தில்லை நடராஜர் ஆலயத்தின் மேற்கு சன்னிதி வாசலில் நின்று, “அப்பனே அன்னம்பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று சொல்வார்கள். ஆனால் நான் இப்பொழுது பெரும் பசியில் இருக்கிறேன், எனக்கு உணவு கிடைக்கவில்லையே? ஆன்றோர்கள் வாக்கு என்ன ஆயிற்று...." என்று சிற்சபை நோக்கி கூறிவிட்டு மேற்கு நோக்கி பசியோடு நடக்க ஆரம்பித்தார், துர்வாச முனிவர்.
இதை அறிந்த பரமேஸ்வரன், உமையாளிடம் “துர்வாச முனிவர் நடந்து செல்லும் பாதையின் இறுதியில் அனந்தீஸ்வரர் கோவில் உள்ளது. அதன் எதிரே உள்ள பதஞ்சலி ஆசிரமத்திற்குச் சென்று துர்வாச முனிவருக்கு உணவளிக்க உத்தரவிட்டார். அதன்படி விநாயகருடன் உமையாள் அங்கு சென்றார்.
பசியுடன் வந்த துர்வாச முனிவரை அழைத்து, "முனிவரே, இதோ உங்களுக்கு அன்னம் இருக்கிறது சாப்பிடுங்கள்” என்று சிவகாமசுந்தரி கூறினார். துர்வாச முனிவர், "நான் உங்களையும் விநாயகரையும் சந்தித்ததில் பேரானந்தம். ஆனால் நான் ஆனந்த நட ராஜ மூர்த்தியின் நடனத்தைக் காணாமல் சாப்பிடமாட்டேன்" என்று கூறி மறுத்துவிட்டார். இதனால் சிவகாம சுந்தரி, ஐயனே இது என்ன சோதனை என்று நினைத்தார்.
உடனே அருகில் இருந்த விநாயகப் பெருமான், நான் முனிவரை உணவருந்த வைக்கிறேன் என்று கூறி, ஆனந்த கூத்தாட தொடங்கிவிட்டார். அதைக் கண்ட துர்வாச முனிவர், "தாயே நான் பரமன் மீதிருந்த பற்றினால் அப்படி கூறினேன். விநாயகரின் திருநடனத்தைக் கண்டு மனமகிழ்ந்தேன். தந்தையைப் போலவே ஒவ்வொரு அசைவிலும் இந்த உலகத்தையே கட்டிப்போடும் வல்லமை விநாயகருக்கு உண்டு” என்று கூறிவிட்டு, அம்மையும் விநாயகரும் கொடுத்த உணவை துர்வாச முனிவர் உண்டு, தன் பசியைப் போக்கிக் கொண்டார்.
ஆன்றோரின் வாக்குப்படி, தில்லையில் யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்தார், துர்வாச முனிவர். விநாயகர் நடனமாடிய இடத்தில்தான், தற்போது கூத்தாடும் பிள்ளையார் திருத்தலம் அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு
கோவிலின் முகப்பில் சிறிய அளவில் கருங்கல்லால் ஆன மூன்று நிலை ராஜகோபுரம் அமைந்திருக்கிறது. அதில் ஐந்து கலசங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோபுரத்தின் கீழே கூத்தாடும் பிள்ளையார் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்து இருக்க, வலது பக்கம் துர்வாச முனிவர், இடது பக்கம் சிவகாமி அம்மையார், இருபுறமும் நந்தி என காட்சியளிக்கிறார்கள். அவர்களை வணங்கிவிட்டு உள்ளே சென்றால் கொடி மண்டபத்தில் கொடிமரம் மட்டுமே உள்ளது.
மகா மண்டபத்தின் வலது பக்கம் ஆஸ்தான மண்டபத்தில் உற்சவ மூர்த்தி தெய்வீகக் காட்சி தருகிறார். மண்டபத்தின் இருபுறமும் சூரியன், சந்திரன் சுதை சிற்பமாய் அருள்பாலிக்கிறார்கள். அர்த்த மண்டபத்தின் முகப்பில் கஜலட்சுமியை வணங்கிவிட்டு உள்ளே சென்றால் பலிபீடம், மூஞ்சூறு வாகனம், வலப்பக்கம் துர்வாச முனிவரும், இடப்பக்கம் சிவகாமசுந்தரி அம்பாள் சன்னிதியும் அமைந்துள்ளது.
கருவறையில் கூத்தாடும் பிள்ளையார், வலது திருவடியை தூக்கி, இடது திருவடியை மூஞ்சுரு வாகனத்தின் மீது பதித்து, கிழக்கு நோக்கி நர்த்தனம் புரிந்தது போல் அற்புதமாய் காட்சி தருகிறார். கோஷ்டத்தில் கஜலட்சுமி, கூத்தாடும் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, சிவலிங்கம், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் சுவரில் புடைப்பு சிற்பங்களாக அழகுற காட்சி தருகின்றனர். கர்ப்பக்கிரகத்துக்கு மேலே கருங்கல்லால் ஆன விமானம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள விநாயகரை 'ஷோடச விநாயகர்' என்று அழைக்கின்றனர்.
திருவிழா
கூத்தாடும் பிள்ளையார் கோவிலில் பொங்கல் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அதிகாலையில் 108 கலசங்களில் புனித நீர் வைத்து கணபதி ஹோமம் செய்யப்பட்டு, 108 கலசாபிஷேகம், பூஜைகள் நடைபெறும். மாலை பன்னீர் கரும்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஓதுவார்களால் தேவாரம், திருவாசகம், விநாயகர் அகவல் பாடப்படும். இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவார்கள்.
விநாயகர் சதுர்த்தி உற்சவம் பத்து நாள் விமரிசையாக நடைபெறும். பத்து நாள் உற்சவத்தில் முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி, சந்திர பிரபை வாகனத்தில் கோவிலை சுற்றி திருவீதி உலா வருவார். ஒன்பதாம் நாள் திருத்தேரிலும் காட்சி தருவார். சிதம்பரம் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் விநாயகர் கோவில்களில், கூத்தாடும் விநாயகர் மட்டுமே திருத்தேரில் பவனி வருவார் என்பது சிறப்பம்சம்.
பத்தாம் நாள் அன்று காலை மகா அபிஷேகம் முடிந்த பிறகு, அனந்தீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு மூஞ்சூறு வாகனத்தில் வீதிஉலா காட்சி, பதினோராவது நாள் விடையாற்று உற்சவம் முடிந்தவுடன் இரவு திருவூஞ்சல் உற்சவம் நடைபெறும். பத்துநாள் உற்சவத்தின்போதும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.
மாதம்தோறும் சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அதுதவிர வளர்பிறை சதுர்த்தி அன்று பிள்ளையாரை வணங்கினால் எல்லாமும் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையோடு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் கூத்தாடும் பிள்ளையாரை பக்தர்கள் பெருமளவில் வணங்கிச் செல்வார்கள். சித்திரை முதல் நாள் அன்றும், ஆடி முதல் நாள் அன்றும் கணபதி ஹோமம் செய்யப்பட்டு 108 சங்காபிஷேகம் நடைபெறும். தினந்தோறும் காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு தேவாரம், திருவாசகம், விநாயகர் அகவல் ஓதுவார்களால் வாசிக்கப்படுகிறது.
பிரார்த்தனை
திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து திருமணம் கைகூடிய உடன், பிள்ளையாருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து 108 சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கூத்தாடும் பிள்ளையாரி டம் பிரார்த்தனை செய்து புத்திர பாக்கி யம் பெற்ற உடன் விநாயகர் மனம் குளிர பாலாபிஷேகம் செய்து இனிப்பு பூரணம் வைத்து, மோதகம் படையலிட்டு, தங்கள் குழந்தையுடன் கணநாதனின் பெயரை உச்சரித்தப்படியே மூன்று முறை உள்பிரகாரத்தை சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
தன் தந்தைக்காக கூத்தாடினார் பிள்ளையார். இதனால் முதன்முதலாக பரதம் கற்றுக்கொள்ள விரும்பும் பிள்ளைகள் கால்சலங்கையை இங்கு பூஜை செய்துவிட்டுதான் பரதம் கற்றுக் கொள்ள தொடங்குகிறார்கள். அப்படி செய்வதால் கூத்தாடும் பிள்ளையாரின் அனுக்கிரகத்தால் பரதத்தை விரைவாக கற்று சிறந்து விளங்குவதாகவும், பரதம் கற்றுக்கொள்ள இங்கேதான் பிள்ளையார் சுழி போடுகிறோம் என்றும் பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.
கோவில், காலை 7 முதல் 10.30 மணி வரையும், மாலை 6 முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று கூடுதல் நேரம் கோவில் திறந்திருக்கும்.
அமைவிடம்
சிதம்பரம் கஞ்சித்தொட்டி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பெரியார் தெரு. இங்குதான் கூத்தாடும் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.






