உலகப் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோவில் சிறப்புகள்

விலங்குகளின் வடிவில் சிவபெருமான் தங்கியிருந்து அருளியதால், 'பசுபதிநாதர்' என்று அழைக்கப்படுகிறார்.
பசுபதிநாதர் கோவில்
பசுபதிநாதர் கோவில்
Published on: 

நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றங்கரையில் மிக பழமையான பசுபதிநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் பசுபதிநாதர், நேபாள நாட்டின் தேசியக் கடவுளாக, காக்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலிலும் பசுபதிநாதர் கோவில் இடம்பிடித்துள்ளது.

புராண தகவல்

பசுபதிநாதர் கோவில் எப்போது கட்டப்பட்டது என்ற உறுதியான தகவல் இல்லை. இக்கோவில் வேத காலத்திற்கு முந்தைய தோற்றம் கொண்டதாகக் கருதப்படுகிறது. மேலும், 'நேபாள மகாத்மியம்' மற்றும் ஸ்கந்த புராணத்தின் 'ஹிம்வத்கண்டம்' ஆகியவற்றின்படி, இங்குள்ள இறைவன் 'பசுபதி' என்ற பெயரில் பெரும் புகழுடன் அருள்பாலிக்கிறார்.

நேபாள புராணங்களில் இக்கோவில் பற்றி உள்ள புராண கதை கூறப்படுகிறது. அதாவது, கயிலாய மலையில் வாழ்வது சிவனுக்கு அலுத்துவிட்டதால் அவர் புதிய இடமொன்றை தேடினார். அப்போது, காத்மாண்டு பள்ளத்தாக்கை அடைந்த அவர் பாக்மதி ஆற்றங்கரையின் அழகில் மயங்கி, எவரிடமும் கூறாமல் அங்கு சென்று வசிக்கத் தொடங்கினார்.

பிரபஞ்சத்தை வழிநடத்த சிவபெருமான் இல்லாததைக் கண்டு கவலையுற்ற மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் அவரைத் தேடி பாக்மதி ஆற்றங்கரைக்கு வந்தனர். அப்போது சிவபெருமான், பசுபதி என்ற பெயரில் விலங்குகளின் கடவுளாக புகழ்பெற்றார். தேவர்கள் அங்கு சென்றபோது மான் வடிவம் கொண்டார் சிவபெருமான். மான் வடிவில் இருந்த சிவனை தேவர்கள் அடையாளம் கண்டுகொண்டனர்.

மான் வடிவில் இருந்த சிவபெருமானை மீண்டும் கயிலாயத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், அதனை ஏற்காத சிவபெருமான், அவர்களின் பார்வையில் இருந்து தப்பிக்க முயன்றார். அப்போது மகாவிஷ்ணு, அந்த மானின் கொம்புகளைப் பிடித்துத் தடுக்க முயன்றபோது, ஏற்பட்ட பலத்த போராட்டத்தில் மானின் கொம்பு உடைந்து நான்கு துண்டுகளாகச் சிதறியது.

கோவில் உருவான விதம்

அதையடுத்து மகாவிஷ்ணு, பாக்மதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை நிறுவி, மான் கொம்புகளை பயன்படுத்தி ஒரு லிங்கத்தை உருவாக்கினார். காலப்போக்கில் அந்தக் கோவில் சிதைவுற்றது. யாராலும் கண்டுகொள்ளப்படாமல் மண்மேடானது. ஒருநாள், மாடு ஒன்று தன் கால்களால் தோண்ட, புதையுண்ட கோவில் வெளிப்பட்டது.

பின்னர் அங்கு மீண்டும் சிலை நிறுவப்பட்டு கோவில் எழுப்பப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து பல மன்னர்களால் இக்கோவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்டுள்ளது, சீரமைக்கப்பட்டுள்ளது. இன்று உலகின் மிகப் பெரிய இந்து கோவில்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

பசுபதிநாதரின் லிங்கத்திருமேனி பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் ஆற்றல் கொண்டது என சிவபுராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டவர்கள் சிவபெருமானைத் தேடி மேற்கொண்ட பயணத்தைப் பற்றி விவரிக்கும் 'கோடி-ருத்ர சம்ஹிதை'யின் 9-வது அத்தியாயத்தில், கேதாரேஸ்வரரின் (கேதார்நாத்) பெருமைகளுடன் பசுபதிநாதரின் கதையும் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கடும் தவம் செய்தபிறகு, காளை வடிவில் பூமிக்குள் மறைந்திருந்த சிவபெருமான் மீண்டும் வெளிப்பட்டார். அப்போது அவரது தலை பசுபதிநாத்திலும், திமில் கேதார்நாத்திலும், முகம் ருத்ரநாத்திலும், கைகள் துங்கநாத்திலும், தொப்புள் பகுதி மத்தியமஹேஸ்வரத்திலும் அமைந்தன.

விலங்குகளின் வடிவில் சிவபெருமான் இங்கு தங்கி அருளியதால், அவர் 'பசுபதிநாதர்' (அனைத்து உயிரினங்களுக்கும் அதிபதி/விலங்குகளின் காவலன்) என்று அழைக்கப்படுகிறார்.

கர்நாடக பூசாரிகள்

கடந்த 350 ஆண்டுகளாக, பசுபதிநாதர் கோவில் பூசாரிகளாக, இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த பட்டர்கள் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. கோவிலின் தலைமைப் பூசாரி, ‘மூல பட்டர்' என்றும் ராவல் என்றும் அழைக்கப்படுகிறார்.

பசுபதிநாதர் கோவில், பகோடா கட்டிடக் கலையில் கட்டப்பட்டுள்ளது. பகோடா முறையின் அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கி, கனசதுர வடிவில் மரங்களால் எழுப்பப்பட்டுள்ளது. இதன் தாமிர மேற்கூரையில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.

தங்க கலசம்

இக்கோவில் நான்கு முதன்மை வாயில்களைக் கொண்டுள்ளது. அந்த வாயில்கள் அனைத்தும் வெள்ளியில் அமைக்கப்பட்டவை. கோவிலின் கலசம் தங்கத்தால் ஆனது. கோவிலில் ஆறடி உயரத்தில் ஆறடி சுற்றளவில் கருங்கல்லால் பசுபதிநாதர் சிலை அமைந்திருக்கிறது. பசுபதிநாதரின் கிழக்குப்புறத்தில் வாசுகிநாதர் வீற்றிருக்கிறார். உலகெங்கிலும் உள்ள இந்துக்களை பெரும்பான்மையாக ஈர்க்கக்கூடிய ஆலயமாக பசுபதிநாதர் கோவில் திகழ்கிறது.

இக்கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் தீஜ் திருவிழா போன்ற பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com