நவக்கிரகங்களும் தனித்தனியாக காட்சியளிக்கும் சூரியனார் கோவில்


நவக்கிரகங்களும் தனித்தனியாக காட்சியளிக்கும் சூரியனார் கோவில்
x
தினத்தந்தி 26 Sept 2025 4:05 PM IST (Updated: 26 Sept 2025 5:49 PM IST)
t-max-icont-min-icon

சூரியனார் கோவில் கருவறையில் சூரிய பகவான் தனது தேவியர்களான உஷா, சாயா ஆகியோருடன் எழுந்தருளியிருக்கிறார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது, சூரியனார் திருக்கோவில். இந்த ஆலயத்தில் சூரிய பகவானை மையமாக வைத்து, மற்ற நவக்கிரகங்கள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரே கோவிலில் அனைத்து நவக்கிரகங்களும் தனித்தனி சன்னிதியில் எழுந்தருளியிருக்கும் சிறப்பை இக்கோவில் பெற்றுள்ளது. இங்கு வந்து வழிபட்டால் அனைத்து விதமான கிரக தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஒரு சமயம், காலவ முனிவர் கொடுமையான தொழு நோயால் அவதிப்பட்டார். அவர், தனது நோய் குணமடைய வேண்டி நவக்கிரகங்களை நோக்கி தவம் இயற்றினார். தவத்தால் மகிழ்ந்த நவக்கிரகங்களும் காலவ முனிவருக்கு காட்சியளித்து, அவரது நோய் தீர வரம் அளித்தனர். இதனால் கோபமடைந்த பிரம்மா, ‘‘ஒருவருக்கு நன்மை, தீமைகளை வழங்கும் அதிகாரம் மட்டுமே உங்களுக்கு உண்டு. வரம் தரும் அதிகாரம் நவக்கிரகங்களுக்கு கிடையாது. நீங்கள் எப்படி வரம் வழங்குவீர்கள்’’ என்று கூறி, பூலோகத்தில் தொழுநோயால் கஷ்டப்படுவீர்கள் என சாபமிட்டார்.

அதன்படி பூலோகத்துக்கு வந்த நவக்கிரகங்கள், வெள்ளை எருக்கு வனத்தில் சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ‘‘இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும். உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அருள்செய்து, அவர்களின் தோஷங்களை போக்குவீர்கள்’’ என வரம் அளித்தார்.

கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் சூரிய பகவான், இரு கரங்களுடன் தாமரை மலரை ஏந்தி காட்சி தருகிறார். அவரின் அருகில் தேவியர்களான உஷா, சாயா ஆகியோர் நிற்கின்றனர். மற்ற 8 கிரகங்களின் சன்னிதிகளும் சூரிய பகவானின் சன்னிதியை பார்ப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. சூரிய பகவானின் சன்னிதிக்கு நேராக சென்றால் விஸ்வநாதர், விசாலாட்சி, நடராசர், சிவகாமி, விநாயகர், முருகன் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன.

சூரிய பகவான் பார்வை அளிக்கும் தெய்வமாக கருதப்படுவதால் பார்வை குன்றியவர்கள், கண் நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், கோவிலுக்கு வந்து வஸ்திரம் சாத்தி, தானியங்கள், மலர்கள், நகைகள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

கோவில் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் காவிரி வடகரையில் ஆடுதுறைக்கு தெற்கே 2 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

1 More update

Next Story