திருச்சோபுரநாதர் கோவில்

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே திருச்சோபுரம் எனும் ஊரில் திருச்சோபுரநாதர் கோவில் அமைந்துள்ளது.
திருச்சோபுரநாதர் கோவில்
Published on

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 217-வது தலமாகவும், அகத்திய மாமுனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது, திருச்சோபுரநாதர் திருக்கோவில். இந்த ஆலயம் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே திருச்சோபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர் என்றும், இறைவி வேல்நெடுங்கண்ணி, தியாகவல்லி அம்மை, சத்யாயதாட்சி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

தல புராணம்

கயிலாயமலையில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. இதைக் காண முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் கயிலாயத்தில் குவிந்தனர். இதனால் பூமியின் வடக்கு பகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்தது. உலகின் சமநிலை இழந்ததால் உலக உயிர்கள் அனைத்தும் துன்பப்பட்டன. எனவே பூமியை சமநிலைப்படுத்த சிவபெருமான், அகத்திய முனிவரை தென் திசை நோக்கி செல்ல பணித்தார்.

அதன்படி தென் திசை நோக்கி பயணித்த அகத்திய முனிவர், செல்லும் வழியில் எல்லாம் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

அவ்வாறு வங்கக் கடற்கரை வழியாக வரும்போது, அகத்தியருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வருந்திய அகத்தியர், தன் வலி தீர்க்க சிவபெருமானை வேண்டி கடல் மணலில் லிங்கம் ஒன்றை அமைக்க முயன்றார். ஆனால் அவர் எவ்வளவு முயன்றும் சரியாக சிவலிங்கம் அமைக்க முடியவில்லை.

சிவபெருமான் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகத்தியர், அருகில் இருந்த மூலிகை செடிகளை பறித்து, அதன் சாற்றை மணலில் கலந்து சிவலிங்கத்தை உருவாக்கினார். பின்பு, அந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார்.

இதையடுத்து அகத்தியரின் வயிற்று வலி நீங்கியது. அதோடு சிவபெருமான், பார்வதி அருட்காட்சியும் கிடைத்தது. பின்னர், லிங்கம் இருந்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டது.

ஒரு காலத்தில், கடல் சீற்றத்தால் இக்கோவில் மணலால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில், இத்தலத்தின் சிறப்பை அறிந்த சிவபக்தர் ஒருவர் சுவாமியை தரிசிக்க வந்தார். ஆனால் இங்கு வந்தபோது, அவ்விடத்தில் கோவில் இல்லை. அப்போது மணலில் ஓரிடத்தில் கோபுர நுனி மட்டும் தென்பட்டது. பின்பு மணலை முழுவதும் அகற்றிப் பார்த்தபோது கோவில் இருப்பது வெளிக்கொண்டு வரப்பட்டது.

கோவில் அமைப்பு

கோவில் கருவறையில் அகத்தியர் மணலில் பிடித்த லிங்கம்தான் மூலவராக இருக்கிறது. சதுர வடிவ பீடத்தின் மீது மணல் லிங்கமாக சோபுரநாதர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மேல் பகுதியில் அகத்தியரின் கைத்தடம் இருப்பதாக கூறுகிறார்கள். சிவலிங்கத்தின் மீது கவசம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் இருக்கும் உருண்டை போன்ற அமைப்பை கங்கா தேவியின் வடிவம் என்கிறார்கள்.

அகத்தியருக்கு காட்சி அளித்த சிவனும், பார்வதியும் அவர் உருவாக்கிய இந்த சிவலிங்கத்திலேயே ஐக்கியமாகிவிட்டதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக சிவலிங்கத்திற்கு மஞ்சள், குங்குமம் கொண்டு வழிபாடு செய்கிறார்கள். இதனால் தான் இவருக்கு 'மங்களபுரீஸ்வரர்' என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோவிலில் முதலில் சிவனுக்கு மட்டுமே சன்னிதி இருந்துள்ளது. பின்னரே தாயாருக்கும் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. அன்னை சத்யாயதாட்சி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சுவாமியையும், அம்பாளையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். கருவறை கோஷ்டத்தின் பின்புறத்தில் லிங்கோத்பவர் காட்சி தருகிறார். மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய இருவரும் லிங்கோத்பவரை வணங்கிய நிலையில் உள்ளனர்.

மஞ்சள், குங்கும அர்ச்சனை

பிரகாரத்தில் சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்ப நாயனார் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். இக்கோவிலுக்கு திருப்பணி செய்த திரிபுவன சக்கரவர்த்தி, அவரது மனைவி திருமேனிகளும் உள்ளன. மேலும் அவர்கள் இருவரும் வழிபட்ட சிவலிங்கமும் காணப்படுகிறது. பைரவர், சூரிய பகவான் சன்னிதிகளும் உள்ளன. கோவில் தல விருட்சமாக கொன்றை மரமும், தல தீர்த்தமாக கிணற்று தீர்த்தமும் உள்ளன.

திருமணத் தடை உள்ளவர்கள், நீண்டநாள் நோயால் அவதிப்படுபவர்கள் சுவாமிக்கு மஞ்சள், குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இந்த ஆலயத்தில் சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

அமைவிடம்

கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் ஆலப்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இக்கோவில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com