

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அதற்கேற்ப பெரும்பாலும் குன்றின் மேல் முருகன் கோவில் அமைந்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், திருச்சுனையில் சிறிய குன்றின் (பாறை) மேல் சிவபெருமான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அகஸ்தீஸ்வரர். இந்த அற்புத தலம் மதுரையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் அருகே உள்ள திருச்சுனையில் அமைந்துள்ளது.
கடம்ப வனக்காடாக இருந்த இந்த இடத்தில் அகத்தியர் தங்கி இருந்து சிவபெருமானின் திருமணக் காட்சியை கண்டு அருள் பெற்றதால், திருமண பாக்கியம் கிட்டும் முக்கிய தலமாக இக்கோவில் விளங்குகிறது.
சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் கயிலாய மலையில் திருமணம் நடக்க இருந்தது. இதைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், மாமுனிவர்களும், சிவனடியார்களும் வட எல்லையான கயிலைக்கு வந்தனர். அப்போது பாரம் தாங்காது உலகின் வட பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது.
இதையடுத்து சிவபெருமான், அகத்திய மாமுனியை அழைத்து உலகை சமநிலை செய்ய உத்தர விட்டார். பெருமானின் உத்தரவை ஏற்று தென் திசை நோக்கி புறப்பட்டார். அகத்தியர். “நினைக்கும் இடத்தில் நினைத்த நேரத்தில் திருமணக்கோலத்தில் காட்சியளிப்பதாக” அகத்தியருக்கு சிவபெருமான் வாக்கு கொடுத்திருந்தார்.
இதனால், ஈசனின் திருமணத்தை காணாது கிளம்பிய அகத்தியருக்கு வழியில் தாகம் ஏற்பட்டது. பாறைகளும், குன்றுகளும் நிறைந்த ஒரு வறண்ட பகுதியில் தன் கைகளால் பாறையில் குழி தோண்ட அங்கே ஒரு சுனை தோன்றியுள்ளது. தாகம் தணிந்த அகத்திய முனிவர், அங்கேயே நீராடி ஈசனைக் காண மனமுருக வேண்டினார். அவரின் வேண்டுதலை ஏற்ற ஈசன், திருமணக் கோலத்தில் இந்த மலைக்கு அருகே உள்ள பிரான்மலையில் காட்சி அளித்தார்.
அதனை அகத்தியர் இங்கிருந்து மனம் மகிழ கண்டுகளித்தார். இதனால் மனங்குளிர்ந்த அகத்தியர், அந்த சுனை அருகிலேயே பாறையில் நீர் தெளித்து லிங்க உருவம் செய்து வழிபட்டார். மேலும் “இத்தல இறைவனை வணங்குவோருக்கு மனக்குழப்பங்கள் எல்லாம் நீங்கி, அக அமைதியை தந்தருள வேண்டும், மக்கள் மகிழ்வுடன் வாழ திருமணங்கள் போன்ற சுபகாரியங்களுக்கு துணை நின்று அருள வேண்டும்" என அவர் வரம் கேட்டார். ஈசனும் அவ்வாறே வரம் அளித்து அருள் புரிந்தார். பின்னாளில் மதுரையை ஆண்டவர்கள் அந்த பாறை சிவலிங்கத்தினை சுற்றிலும் கோவில் எழுப்பி வழிபட தொடங்கினார்.
அகத்தியரின் பெயராலேயே இறைவன் 'அகஸ்தீஸ்வரர்' எனவும், அம்மன் 'பாடக வள்ளி தாயார்' என்ற பெயரிலும் அழைக் கப்படுகிறார்கள். அகத்தியர் சுனை தோண்டி வழிபட்டதால் இவ்வூருக்கு 'திருச்சுனை' என்ற பெயர் ஏற்பட்டது. மன அமைதிக்காகவும், திருமணங்களில் ஏற்படும் தோஷம், சங்கடங்கள் போன்ற இடையூறுகளையும், இன்னல்களையும் நீக்கி திருமணம் நல்லபடியாக நடக்கவும் அகஸ்தீஸ்வரிடம் வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர்.
“அகத்தியரின் வேண்டுதலை ஏற்ற ஈசன், திருச்சுனை மலைக்கு அருகே உள்ள பிரான்மலையில் திருமணக் கோலத்தில் காட்சி அளித்தார்”
திருமணக்கோலம் கண்ட தலமாதலால் திருச்சுனை கிராமத்தை சுற்றியுள்ள கிராமத்தினர் பெரும்பாலும் இந்த கோவிலில் வைத்து திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
திருமணத்தடை உள்ள பெண்கள் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் பாடக வள்ளி அம்மனுக்கு மாங்கல்யமும், பட்டு வஸ்திரமும் வழங்கி வழிபட்டால் திருமணம் கைகூடும் எனவும், திருமணமாகாத ஆண்கள், கிழக்கு நோக்கி அழகுற அமர்ந்திருக்கும் அகஸ்தீஸ்வரருக்கு மாலை வழங்கி வேண்டிக்கொண்டால் இறைவன் அவர்களுக்கு விரைவில் கல்யாண மாலை வழங்குவார் எனவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
இங்கு அகத்திய முனிவருக்கு என தனிச் சன்னிதி உள்ளது. கோவிலுக்கு குன்றின் மேல் ஏறி சென்றவுடன் நவக்கிரகங்களை தரிசிக்கலாம்.
அதேபோல இந்த கோவிலில் சித்தி விநாயகர், காசி விஸ்வநாதர்-விசாலாட்சி, லிங்கோத்பவர், வள்ளி தெய்வானையுடன் முருகன், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர், பைரவர், உஷா தேவி, பிரத்யுஷா தேவியுடன் சூரியன், ரேவதியுடன் சந்திரன், பைரவர் ஆகியோர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். கோவிலின் பின்புறம் அகத்திய முனிவர் ஏற்படுத்திய வற்றாத சுனை உள்ளது. இத்தலத்தின் தல விருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக திருச்சுனையும் உள்ளன. கோவிலில் முக்கிய திருவிழாவாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
அதேபோல ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோவில், இயற்கை வளம் சூழ்ந்த வயலுக்கு நடுவில் பாறையின் மேல் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல பாறைகளுக்கு நடுவே படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு திருமணம் அதிக அளவில் நடைபெறுவதால் கோவிலின் அடிவாரத்தில் திருமண மண்டபங்களும் உள்ளன.
இந்தத் தலம் மதுரையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மதுரை - திருச்சி பேருந்தில் சென்றால் கருங்காலங்குடி நிறுத்தத்தில் இறங்கி, சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். நகர பஸ்சில் சென்றால் திருச்சுனை ஆர்ச் அருகே இறங்கி செல்லலாம்.