திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில்

திருப்புட்குழி தலத்தில் பெருமாளின் வலதுபுறத்தில் பூதேவியும், இடதுபுறத்தில் ஸ்ரீதேவியும் வீற்றிருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில்
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த தலமாகவும், ராமாயண காலத்தில் ஜடாயு ராவணனிடம் போர் புரிந்து மோட்சம் அடைந்த தலமாகவும் இக்கோவில் போற்றப்படுகிறது.

தல புராணம்

ராமர் வனவாசம் சென்றபோது, ராமரின் மனைவி சீதையை இலங்கை வேந்தன் ராவணன் சிறை பிடித்து கடத்தி சென்றான். அப்போது பறவைகளின் அரசனான ஜடாயு, சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டார். அதில் சிறகுகளை இழந்த ஜடாயு, இத்தலத்தில் வீழ்ந்து மரண தருவாயில் இருந்தார். அப்போது சீதையை தேடி அவ்வழியாக வந்த ராமரிடம் நடந்த விவரங்களை தெரிவித்துவிட்டு உயர் நீத்தார், ஜடாயு. பின்னர் ராமர், தன் கைகளாலேயே ஜடாயுவுக்கு ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஜடாயு மோட்சம் அடைந்தார்.

'திரு' என்றால் 'மரியாதை', 'புள்' என்றால் 'ஜடாயு', 'குழி' என்றால் 'ஈமக்கிரியை செய்தல்' என்று பொருள்படும். ராமபிரான், ஜடாயுவுக்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் 'திருப்புட்குழி' என்று பெயர் பெற்றது.

இக்கோவிலில் மூலவரான விஜயராகவப் பெருமாள், தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார்.

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில்
திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள்

கோவில் அமைப்பு

இக்கோவில் 13-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சோழர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். சோழ காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இந்த ஆலயம் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்துக்கு முன்பாக பலிபீடம், கொடிமரம் காணப்படுகின்றன.

கருவறையில் மூலவர் விஜயராகவப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் மேல் கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ் கரங்களில் அபய, ஹஸ்த முத்திரை காட்டியும் காட்சி தருகிறார்.

ஜடாயுவுக்கு ராமர் ஈமக்கிரியைகள் செய்தபோது ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் வலதுபுறம் இருந்த ஸ்ரீதேவி இடப்புறமாகவும், இடதுபுறம் இருந்த பூதேவி வலதுபுறமாகவும் மாறி அருள்பாலித்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பெருமாளின் வலதுபுறத்தில் பூதேவியும், இடதுபுறத்தில் ஸ்ரீதேவியும் உள்ளனர்.

இக்கோவிலில் பெருமாளுக்கு இடதுபுறம் தாயார் சன்னிதியும், வலதுபுறம் ஆண்டாள் சன்னிதியும் அமைந்திருப்பது சிறப்பாகும்.

அதிசய கல் குதிரை வாகனம்

அர்த்த மண்டபத்தில் ஆழ்வார் சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் ராமானுஜர், தன் குருவான யாதவப்பிரகாசரிடம் வேதம் கற்றுள்ளார். ராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இங்கு உள்ளது. ஜடாயுவுக்கு மோட்சம் அளித்த ராமன், இங்கு தீர்த்தம் ஒன்றை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது. கோவிலுக்கு எதிர்புறத்தில் அமைந்துள்ள அந்த தீர்த்தம் 'ஜடாயு புஷ்கரணி' என்று அழைக்கப்படுகிறது. அதன் அருகில் ஜடாயுவுக்கு சன்னிதியும் உள்ளது. இக்கோவிலில் உள்ள கல் குதிரை வாகனம் அதிசயம் வாய்ந்ததாகும். உண்மையான குதிரையை போன்று அசையும் உறுப்புகளை கொண்டுள்ளது.

குதிரையின் தலைப்பகுதி மேலும், கீழும் அசையும்படியும், வால் பகுதி அதற்கேற்ப அங்கும் இங்கும் இயங்கும்படியும், கால்கள் அடியெடுத்து வைப்பது போலவும் பார்ப்போரை பிரமிக்க வைக்கிறது.

வழிபாடு

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறப்பு தலம் இதுவாகும். அமாவாசை அன்று, இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்கிறார்கள். குடும்பப் பிரச்சினை, சொத்து தகராறு, கோர்ட்டு வழக்கு உள்ளவர்கள், பிரிந்த தம்பதியர் இத்தலம் வந்து பெருமாளை மனதார வழிபட்டால் குறைகள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு அமையும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர், கருவறை வாசலில் மணிகளை தொங்கவிட்டு பெருமாளை வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்கள், இத்தலத்தில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி, ஊறவைத்த பயிறை மடியில் கட்டிக்கொண்டு செல்கிறார்கள். மறுநாள் அப்பயிறு முளைத்திருந்தால் விரைவில் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

அமைவிடம்

காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து சென்றால் கோவிலை அடையலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com