திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில்

திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம் போன்ற பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில்
திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில்
Published on

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது, மரகதவல்லி சமேத திந்திரிணீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தேவார வைப்பு தலங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது. 'திந்திரிணி' என்றால் வடமொழியில் 'புளிய மரம்' என்று பொருள். புளிய மரங்களால் சூழப்பட்டு இருந்ததால் இவ்வூர், 'திந்திரிணி வனம்' என்று பெயர் பெற்றது. அதுவே காலப்போக்கில் மருவி 'திண்டிவனம்' என்றானது. எனவே இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான், 'திந்திரிணீஸ்வரர்' என்றும், 'திண்டீச்சரமுடையார்' என்றும் அழைக்கப்படுகிறார்.

தல சிறப்பு

இந்த ஆலயம் கி.பி.10-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் உள்ள திந்திரிணீஸ்வரரை திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி, வால்மீகி போன்ற முனிவர்கள் வழிபட்டு முக்தி பெற்றதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் சிவபெருமான், திந்திரிணீஸ்வரர், திருமூலநாதர், கரகண்டேஸ்வரர், ஞானகுரீஸ்வரர், பக்த பிரகலாதீஸ்வரர் ஆகிய 5 திருமேனிகளோடு காட்சி அளிக்கிறார். எனவே இத்தலம், 'பஞ்சலிங்க ஷேத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது. திருநாவுக்கரசர், ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் இக்கோவிலை 'கயிலைநாதனை கண்டு பேறு பெறக்கூடிய தலங்களுள் திண்டிவனமும் ஒன்று' என்று போற்றி சிறப்பித்துள்ளார்.

கோவில் அமைப்பு

கோவிலில் கிழக்கு நோக்கியபடி ஏழு நிலை ராஜ கோபுரம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தை கடந்து சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் காணப்படுகிறது. கருவறையில் சிவபெருமான், திந்திரிணீஸ்வரர் என்ற திருநாமத்துடன் லிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரை தரிசிக்கலாம்.

வெளிப்பிரகாரத்தில் மூலவரின் இடதுபுறத்தில் மரகதாம்பிகை அம்பாள் தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு பச்சை பட்டு சாற்றி வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வெளிப்பிரகாரத்தில் நவக்கிரகங்கள், திருமூல நாதர், பைரவர் ஆகியோருக்கும் தனித் தனிச் சன்னிதிகள் காணப்படுகின்றன.

இக்கோவிலின் கீழ்புறம் கருங்கல்லாலும், மேல்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்டுள்ளது. கோவில் விமானம், வியாச முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோவிலில் சண்டிகேஸ்வரர், முருகப்பெருமான் ஆகியோரும் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

திருவிழா

இந்த ஆலயத்தில் சித்திரை பெருவிழா, சித்ரா பவுர்ணமி, நவராத்திரி, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, மாசிமகம் போன்ற விழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மாசி மாதம் சிவராத்திரி அன்று, மரகதாம்பிகை அம்பாள் மீது உச்சி முதல் பாதம் வரை சூரியக் கதிர்கள் விழுவது அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் மூலம் சூரிய பகவான், மரகதாம்பிகையை வழிபடுவதாக ஐதீகம்.

வாரந்தோறும் வியாழக்கிழமை எலுமிச்சைப் பழ விளக்கேற்றி தட்சிணாமூர்த்தியையும், வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனையும் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருமண வரம், குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் வேண்டுபவர்களும், தொழிலில் பிரச்சினை உள்ளவர்களும் இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வேண்டி வழிபட்டு செல்கிறார்கள்.

அமைவிடம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரின் மையப் பகுதியில் திந்திரிணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகிலேயே திண்டிவனம் ரெயில் நிலையமும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com