வையங்குடி பசுபதீஸ்வரர் கோவில்

பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி சுவாதி அன்று மாலையில் நடைபெறும் திருமண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.
கடலூர் மாவட்டம் வையங்குடி கிராமத்தில் லோகநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
பசுபதீஸ்வரர்- லோகநாயகி
Published on

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தில் லோகநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

ஆலய சிறப்பு

சோழர் காலத்தில் பிரமாண்ட ஆலயமாக இருந்தது. காலப்போக்கில் பரப்பளவு சுருங்கி, இப்போது எளிய ஆலயமாக காட்சி தருகிறது. இந்த ஆலய புனரமைப்பின்போது ஒரு சிறிய கல்வெட்டு கிடைத்தது. அதில், 'ராஜாதி ராஜன் (கி.பி.1018-1054-ல்) எழுப்பிய இந்த ஆலயம், விஜயநகர மன்னர்கள் காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதன் கட்டிட அமைப்பு, கட்டுமானத்திற்குப் பயன்படுத்திய கருங்கற்கள் மற்றும் தெய்வ வடிவங்களின் கலைநயத்தை ஆய்வு செய்தபோது, நந்தியம் பெருமான், பசுபதீஸ்வரர் மற்றும் லோகநாயகி ஆகிய தெய்வ வடிவங்கள் சோழர் காலத்தவை என கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல கருவறை கோஷ்ட தெய்வங்கள் விஜயநகர மன்னர்களின் காலத்தை உறுதி செய்கின்றன.

இங்குள்ள கருங்கற்கள் சற்று நிறம் மாறுபட்டவையாக உள்ளன. இக்கற்களை செங்காந்தக் கற்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்தகைய செங்காந்தக் கற்கள் திட்டக்குடி சிவாலயம், விஷ்ணு ஆலயங்கள் மற்றும் இப்பகுதி பிற ஆலயங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகின்றது. சிதிலமடைந்த இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு, கடந்த 2024-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

ஆலய அமைப்பு

ஊரின் மையப் பகுதியில் நடுநாயகமாக கிழக்கு நோக்கிய எளிய நுழைவு வாசலுடன் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் நந்தி மண்டபத்தில் காட்சி தரும் நந்திதேவர் இறைவனை தரிசித்தபடி காணப்படுகிறார். அவரை வணங்கிவிட்டு சென்றால் பசுபதீசுவரர் சன்னிதி உள்ளது. சன்னிதியில் அம்மையப்பன் சுதைச் சிற்பங்கள் கிழக்கு முகமாகக் காட்சி தருகின்றன.

ஐந்து எளிய படிகளை கடந்து உள்ளே நுழைந்ததும் கருவறை முன் மண்டபம் காட்சி தருகிறது. இதில் பழமையான கணபதி மற்றும் பஞ்சலோக உற்சவமூர்த்திகள் அமைந்துள்ளனர். கருவறைக்குள் பசுபதீஸ்வரர் ஒளி வீசும் கோலத்தில் அருள் வழங்கி வருகின்றார். சித்திரை மாதந்தோறும் முதல் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் சுவாமியை வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

நின்ற கோலத்தில் அன்னை

ஆலய கருவறை வெளிச்சுற்று, பஞ்ச கோஷ்டங்களில் அமைந்துள்ளன. முதலில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஒருங்கே உள்ளனர். துர்க்கையின் எதிரில் சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. கருவறை விமானத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கில் மகாவிஷ்ணு, வடக்கில் பிரம்மா காட்சிதர, நாற்புறமும் நந்தியின் அமர்ந்த கோலங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன.

வலச்சுற்றில் அன்னை லோகநாயகி சன்னிதி உள்ளது. ஐந்து எளிய படிகளில் ஏறி உள்ளே நுழைந்ததும் கருவறை முன் மண்டபம், கருவறைக்குள் அன்னை லோகநாயகி எளிய வடிவில் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் மேலிரு கரங்களில் பாசம், அங்குசம் தாங்கியும், கீழிரு கரங்கள் அபய, வரத முத்திரைகளோடும் அருள்காட்சி தருகிறார்.

அன்னையின் கருவறை விமானத்தில் நான்கு திசைகளிலும் அம்மன் வடிவங்களும், சிங்க வாகனங்களும் வண்ணச் சிற்பங்களாக அமைந்துள்ளன. ஆலயச் சுற்றின் முகப்பில் அடியார் பெருமக்கள் முற்றோதல் செய்ய வசதியாக தகடு கூரை வேய்ந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், மகப்பேறு முதலான வேண்டுதல்களுக்கும் சிறந்த பிரார்த்தனை தலமாக இக்கோவில் உள்ளது. மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், நவராத்திரி, பங்குனி உத்திரம் மற்றும் பிரதோஷம் ஆகியவை வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக ஆவணி சுவாதி அன்று மாலையில் நடைபெறும் திருமண உற்சவம் சிறப்பு வாய்ந்தது. இதில் பங்கேற்று வேண்டுபவர்களுக்கு ஓராண்டிற்குள் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அமைவிடம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் வையங்குடி திருத்தலம் அமைந்துள்ளது. இது திட்டக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும், பெண்ணாடத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், விருத்தாசலத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கடலூர் - திருச்சி வழித்தடத்தில் ஆவினன்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, வடக்கில் 4 கி.மீ. சென்றால் கோவிலை அடையலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com