ஒன்பத்துவேலி வன்மீகநாதர் ஆலயம்

ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள் ஒன்பத்துவேலி வன்மீகநாதர் கோவிலில் வழிபாடுகளை செய்வது விசேஷமானதாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஒன்பத்துவேலி என்ற கிராமத்தில் உள்ளது, வன்மீகநாதர் கோவில். குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவில் இறைவியின் திருநாமம் சோமகலா அம்பாள். இங்குள்ள சிவலிங்கம் புற்றில் இருந்து தோன்றியதால், இத்தல இறைவன் 'வன்மீகநாதர்' என்று அழைக்கப்படுகிறார். வன்மீகம் என்பதற்கு 'புற்று' என்று பொருள். பிறந்த நாளில் இக்கோவிலுக்கு வந்து வன்மீகநாதரை வழிபட்டால் பிரச்சினைகள் நீங்கி வளமிக்க வாழ்வு அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பண்டைய காலத்தில் ஜோதிட வல்லுநர்களும், கணிதமேதைகளும் வாழ்ந்த தலமே ஒன்பத்துவேலி ஆகும். தற்போதும் நவாம்சம், நவநீதிகள், நவபாஷாணம், நவமூலிகைகள், நவசாரம், நவகற்கள், நவஜோதிகள், நவசக்திகள் போன்ற நவசாதனங்கள் பொங்கி பொழியும் தலம் என்பதால் எண்கணித ஜோதிடர்களும், நாடி கைரேகை ஜோதிடர்களும் வழிபட வேண்டிய தலமாக வன்மீகநாதசுவாமி கோவில் உள்ளது.
வன்மீகநாதர்
ஒன்பத்துவேலி கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் வன்மீகநாதர், 'வான்மேகநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் உள்ள சோமகலா அம்பாள், சந்திரனின் அம்சத்தை பெற்று விளங்குபவராக அமைந்து அருள்வழங்கி வருகிறார். கோவில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். இக்கோவிலின் தல விருட்சமாக நெல்லி மரம் உள்ளது. நெல்லிமரத்தின் அடியில் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவற்றிற்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கிடையில் 18 கை வனதுர்க்கை காட்சி அளிக்கிறார். எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வனதுர்க்கையை வழிபட்டு வந்தால் பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள் போன்றவை நீங்கும் என்று கூறப்படுகிறது. 18 கை வனதுர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் பூஜை நடத்தப்படுகிறது.
வானில் நட்சத்திர தரிசனம்
முற்காலத்தில் ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் இருந்து குதிரையில் ஒன்பத்துவேலிக்கு வந்து இரவில் வானில் நட்சத்திர தரிசனங்களை பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. கோவிலில் இருந்து வானில் விசேஷமான முறையில் நட்சத்திர தரிசனங்களை அந்த காலத்தில் பக்தர்கள் பெற்றார்கள் என்பது செவிவழி செய்தியாக அறியப்படுகிறது. இங்கிருந்து வான்வெளி நட்சத்திர கோள் தரிசனங்களை பெறுதல் நல்ல நினைவாற்றலை பெற்றுத்தரும் என்பது பக்தர்களின் நம்பிக்க.
பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத் திர நாளில், ஒன்பத்து வேலி வன்மீகநாதர் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். இதன்மூலம் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களும், துன்பங்களும் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் ஒன்பத்துவேலி வன்மீகநாதர் 'வளமான வாழ்வை அருளும் வன்மீகநாதர்' என அழைக்கப்படுகிறார்.
நாள்பட்ட நோய்கள் நீங்கும்
மேலும், வன்மீகநாதரை வழிபட்டால் உடலில் ஏற்படும் சரும நோய்கள், நாள்பட்ட நோய்கள் போன்றவை நீங்கி, ஆரோக்கியம் பெறலாம். ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள் இந்த தலத்தில் வழிபாடுகளை செய்வது விசேஷமானதாகும். 9 என்பது செவ்வாய்க்குரிய எண் ஆகும். இதனால் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி உள்ளவர்கள் ஒன்பத்துவேலி வன்மீகநாதரை வழிபட்டால் நன்மைகள் பெறலாம்.
இந்த கோவிலில் காலை 9 மணி முதல் 12 மணி வரை மட்டுமே நடை திறந்திருக்கும். எனவே பக்தர்கள் அந்த நேரத்தில் சென்று வன்மீகநாதரை வழிபடுவது சிறந்தது.
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து கண்டியூர் வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் பாம்பாலம்மன் கோவில் பஸ் நிறுத்தம் வரும். அதில் இருந்து சிறிது தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.






