திருப்பதியில் விமரிசையாக நடைபெற்ற ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
ஆண்டாள் திருக்கல்யாணத்தை விளக்கும் வகையில் எஸ்.வி. இசை மற்றும் நாட்டியக் கல்லூரி மாணவிகள் நாட்டிய நாடகம் நடத்தினர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ் புனித மார்கழி மாதத்தை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் புகழ்பெற்ற சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டு திருப்பாவை சொற்பொழிவு நிகழ்த்தினர்.அதன் தொடர்ச்சியாக ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
மார்கழி மாத நிறைவு விழாவையொட்டி, திருப்பதி அன்னமாச்சார்யா கலாமந்திரத்தில் நேற்று முன்தினம் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதேபோல் திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகக் கட்டிட வளாகத்தில், நேற்று இரவு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
திருமண வைபவத்திற்காக பகவான் கிருஷ்ணர் மற்றும் ஆண்டாள் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்டு, மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்கள் அன்னமாச்சார்யாவின் பாடல்களை மெல்லிசையாகப் பாடினர். பின்னர், வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னர், ஆண்டாள் திருக்கல்யாணத்தை விளக்கும் நாட்டிய நாடகம் நடைபெற்றது. எஸ்.வி. இசை மற்றும் நாட்டியக் கல்லூரி மாணவிகள் நடத்திய நடத்திய இந்த நாட்டிய நாடகம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.
விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சுப்பராயுடு, விஜிலன்ஸ் அதிகாரி முரளிகிருஷ்ணா, மற்றும் அதிகாரிகள், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சியை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நேரலையாக ஒளிபரப்பியது.








