திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கை படித்துக் காட்டினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாரம்பரிய முறைப்படி வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யும் தினமான ஆனிவார ஆஸ்தானம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணியளவில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி தொடங்கி 5 மணிநேரம் நடந்தது. இதையொட்டி பிரதான அர்ச்சகர்கள் ஆகம விதிமுறைபடி பூஜைகள் செய்து மூலவர் ஏழுமலையானை வெள்ளைநிற வஸ்திரத்தால் மூடினர். கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தன விழுது, குங்குமம் மற்றும் பிற நறுமண பொடிகள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவில் மூலவர் கருவறை, தங்கக்கொடி மரம், பலிபீடம், தரைதளம், மேற்கூரை, பூஜை பொருட்கள், தூண்கள் போன்றவற்றை தூய நீரால் கழுவி சுத்தம் செய்தனர்.

இதில் திருமலை -திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜே.சியாமளா ராவ், தலைவர் பி.ஆர்.நாயுடு மற்றும் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி சா.வெங்கையா சவுத்ரி உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.தூய்மைப்பணி முடிந்ததும் மூலவர் மீது போர்த்தப்பட்ட வெள்ளைநிற வஸ்திரத்தை அகற்றி விட்டு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பிறகு மதியம் 12 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தூய்மைப்பணியால் நேற்று அஷ்டதல பாத பத்மாராதனை சேவை மற்றும் 6 மணிநேர தரிசனம், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

இன்று காலை 7 மணிக்கு தங்க வாயில் முன் உள்ள கண்டா மண்டபத்தில் சர்வபூபால வாகனத்தில் உபய நாச்சியார்களுடன் மலையப்பசாமியை கருடாழ்வாரை நோக்கி கொலுவாக அமர்த்தினார்கள். விஷ்வக்சேனர் ஒரு தனி மேடையில் தெற்கு நோக்கி கொலுவாக அமர்த்தினார்கள்.

அதைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு, பிரசாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. திருமலை பெரிய ஜீயர் சுவாமி ஒரு வெள்ளித்தட்டில் 6 பெரிய பட்டாடைகளை தலையில் சுமந்து, மங்கள வாத்தியங்களுடன் மாடவீதி வழியாக கோவிலுக்குள் வந்து மூலவரிடம் சமர்ப்பித்தார். பின்னர் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் மற்றும் தேவஸ்தான அதிகாரிக்கு முறையாக 'லச்சனம்' என்னும் சாவி கொத்தை வலது தோளில் போடப்பட்டது. ஆரத்தி, சந்தனம், தாம்பூலம், தீர்த்தம், சடாரி மரியாதைகளுடன் அந்தச் சாவிக்கொத்து மூலவர் ஏழுமலையான் பாதத்தில் வைக்கப்பட்டது. அதன்பிறகு கோவிலில் ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கை படித்துக் காட்டினர். அத்துடன் ஆனிவார ஆஸ்தானம் நிறைவுபெற்றது.

மாலை 6 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சர்வ அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

ஆனிவார ஆஸ்தானம் நடைபெற்றதால் இன்று கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com