திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா... 23-ந் தேதி கொடியேற்றம்

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 27-ந்தேதி கருட சேவை நடைபெறும்.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில்
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில்
Published on

திருப்பதி,

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மே 23 முதல் 31-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி 22-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. விழாவின்போது கோவிந்த நாம கோஷங்கள் முழங்க பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் உற்சவ மூர்த்திகள் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். வாகன சேவைகள் தினமும் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 27-ந்தேதி கருட சேவை, 30-ந்தேதி தேரோட்டம், 31-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

விழாக்களின் ஒரு பகுதியாக திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்ம பிரசார பரிஷத் அன்னமாச்சாரியார் திட்டம் மற்றும் தாசசாகித்ய திட்டம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தினமும் ஆன்மிக, பக்தி மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பிரம்மோற்சவத்துக்கு முன்பாக 18-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அப்போது கோவில் கருவறை, பல்வேறு சன்னதிகள், தூண்கள், மாடங்கள், மேற்கூரைகள், கொடிமரம், பலிபீடம், பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தூய நீரால் கழுவி சுத்தம் செய்யப்படுகிறது. கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்ததும் நறுமண புனிதநீர் கலவை கோவில் வளாகம் முழுவதும் தெளிக்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com