ஆறுமுகநேரி மாரியம்மன் கோவில் சித்திரை கொடை விழா... திருவிளக்கு பூஜை

அம்மன் வீதியுலாவின்போது விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் ஆயிரங்கண் பானை, மாவிளக்குப்பெட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை
Published on

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா கடந்த 1ஆம் தேதி யாக பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் நாள் இரவில் திருவிளக்கு பூஜையும் சுப்பிரமணியராக காட்சியளித்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. 2-வது நாள் இரவில் அம்மன் கிருஷ்ணராக காட்சியருளலும் நேற்று முன்தினம் இரவில் மகாலட்சுமியாக காட்சியருளலும் நடந்தது. நேற்று மதியம் சுவாமிகள் மஞ்சள் நீராடி கடலுக்குச் சென்றனர். அங்கு புனித நீராடி கும்பம் எடுத்து வந்தனர். இரவில் சரஸ்வதியாக அருள்பாலித்த அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இன்று மதியம் சுவாமிகள் மஞ்சள் நீராடி ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுக்கு செல்கின்றனர். அங்கு நடக்கும் சிறப்பு வழிபாட்டில் அம்மனின் அருளாளர்கள் தினகரன், சக்திவேலன், முருகேசன், கந்தப்பன், முருகானந்தம், தேரடிமுத்து ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பின்னர் கும்பம் எடுத்து ஆறுமுகநேரியில் இரவில் வீதியுலா தொடங்குகிறது. அப்போது விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் ஆயிரங்கண் பானை, மாவிளக்குப்பெட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதலும் நடக்கிறது. நாளை காலை வரை தொடரும் இந்த நிகழ்ச்சியின் நிறைவில் சூலம் ஏந்திய சக்தியாக காட்சி தரும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்ப வீதியுலா தொடங்குகிறது. இரவில் மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

விழாவின் நிறைவு நாளான 7ஆம் தேதி காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி அபிஷேகமும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com