சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
கடலூர்,
பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம் ஆகிய விழாக்களின் போது, மூலவராகிய நடராஜமூர்த்தி உற்சவராக புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஜோடிக்கப்பட்ட ஐந்து தேர்களில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர், சுவாமிகள் நான்கு மாட வீதிகளான தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது ‘சிவ சிவா கோஷம்’ விண்ணை பிளந்தது. தேரோட்டத்தையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3-ந் தேதி நடராஜமூர்த்திக்கு மகாஅபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது. பின்னர் 4-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா, 5-ந் தேதி இரவு கனகசபை நகரில் உள்ள ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.






