

பக்ரீத் பண்டிகை என்றும், ஹஜ்ஜுப் பெருநாள் என்றும், தியாகத்திருநாள் அழைக்கப்படும் பண்டிகை குறித்த வரலாற்று தகவல்கள் வியப்பை தரக்கூடியது. இப்ராகீம் (அலை) நபி அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மாதங்களில் கடைசி மாதம் துல்ஹஜ் எனப்படும். அந்த மாதத்தில் பத்தாம் நாள் இந்த தியாகத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
இறைத்தூதர்களில் ஒருவர் இப்ராகீம் (அலை) அவர்கள். குழந்தையாக இருந்தபோதே உருவமற்ற ஏக இறைவன் அல்லாஹ் பற்றி அவர் அறிந்து கொண்டார். ஏகத்துவ கொள்கை பற்றி அவர் தனது தந்தையிடமும் மற்ற மக்களிடமும் எடுத்துரைத்தார். மக்கள் கடுமையாக எதிர்த்தபோதிலும் அவர் தனது ஏகத்துவ வழியினை தீவிரமாக பின்தொடர்ந்தார். இதுபோல் பல்வேறு சோதனைகளை அவருக்கு இறைவன் அளித்தான். அத்தனை சோதனைகளிலும் அவர் கலங்காமல் இருந்தார். ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே தனக்கு போதுமானவன் என்று நம்பிக்கையுடன் சோதனைகளை எதிர்கொண்டார்.
இறைவன் அவருக்கு அளித்த சோதனைகளில் ஒன்று 86 வயது வரை அவருக்கு குழந்தை பாக்கியம் அளிக்காமல் சோதித்தது ஆகும். அப்போதும் அவர் மனம் தளராமல் இறைவனிடம் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது நம்பிக்கையின் காரணமாக அந்த முதிய வயதில் அவருக்கு ஒரு ஆண் குழந்தையை இறைவன் அருளினான்.
அந்தக்குழந்தைக்கு இஸ்மாயில் என்று பெயரிட்டார். இறைவனின் அருளால் பிறந்த அந்தக்குழந்தையை அவர் சீராட்டி, பாராட்டி வளர்த்தார். தனது அன்பு முழுவதையும் அந்தக்குழந்தை மீது செலுத்தினார். அப்போது இறைவனின் சோதனை தொடர்ந்தது.
மனைவி, குழந்தையை சுடும் பாலைவனத்தில் கொண்டு போய் விடுமாறு இறைக்கட்டளை பிறந்தது. இறைவனின் உத்தரவுக்கு எந்த மறுப்பும் இன்றி உடனே கீழ்ப்படிந்தார். மனைவி மற்றும் கைக்குழந்தையை சுடும் பாலைவனத்தில் கொண்டு போய் விட்டார். சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர் இன்றி அழுத குழந்தை தரையை உதைத்த போது அதில் இருந்து தண்ணீர் பீறிட்டு கிளம்பியது. அதுவே 'ஜம் ஜம் நீரூற்று' ஆகும்.
எந்த எண்ணத்தில் இந்த தண்ணீரை ஒருவர் குடிக்கிறாரோ அந்த எண்ணம் அவருக்கு நிறைவேறும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு அந்த தண்ணீர் புனிதம் நிறைந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அடுத்து நபி இப்ராகீம் (அலை) அவர்களுக்கு இறைவன் இன்னொரு சோதனையையும் கொடுத்தான். அவர் மிகவும் பாசமாக வளர்த்த மகன் இஸ்மாயில் 13 வயதாக இருந்தபோது அந்த சோதனை வந்தது. அப்போது நபி இப்ராகீம் (அலை) அவர்களுக்கு கனவின் மூலம் இறைகட்டளை பிறந்தது. 'இஸ்மாயிலை அறுத்து பலியிட வேண்டும்' என்பதுதான் அந்தக்கனவு. இதை மகனிடம் அவர் தெரிவித்தபோது அவரும் அதை மறுப்பேதும் இன்றி ஏற்றுக்கொண்டார்.
மகனை மலைப்பகுதிக்கு அழைத்துச்சென்று அறுத்து பலி கொடுக்க முயன்றார். ஆனால் கத்தி அறுக்க மறுத்தது. அப்போது இறை அறிவிப்பு வெளியானது. இது குறித்த திருக்குர்ஆன் வசனங்கள் (100-108) இவ்வாறு குறிப்பிடுகின்றது.
“என் இறைவா! ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக; அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்" என்று இப்ராகீம் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். (இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு) சாந்த குணம் கொண்ட ஒரு மகனைப் பற்றி நாம் (அல்லாஹ்) அவருக்கு நற்செய்தி அறிவித்தோம். அம்மகன் அவருடன் சேர்ந்து உழைக்கும் வயதினை அடைந்தபோது இப்ராகீம் (ஒருநாள்) அவரிடம் கூறினார்: “என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!" அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்து விடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்”.
இறுதியில் அவ்விருவரும் இறைவனுக்கு முன்னால் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்கள். மேலும், இப்ராகீம் மகனை முகங்குப்புறக் கிடத்தினார். அப்போது நாம் அவரை அழைத்துக் கூறினோம்: “இப்ராகீமே! நீர் கனவை நனவாக்கிவிட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம். திண்ணமாக, இது ஒரு தெளிவான சோதனையாய் இருந்தது." மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம். பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் விட்டு வைத்தோம்.
மகத்தான இந்த நிகழ்வுதான் தியாகத்திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை அறுத்து அதன் இறைச்சியை அனைவருக்கும் பங்கிட்டு அளிப்பது வழக்கம்.
தியாகத்தின் மூலமே இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய முடியும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
-மு.ஷரிபா, மேட்டூர்.