

வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை தர்மராஜன் கோட்டை பால தண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்தது. திருவிழாவின் முதல் நாள் பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து, பூக்குழி இறங்கி பால தண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இரண்டாம் நாள் பட்டுப்பல்லக்கில் சுவாமி புறப்பட்டு வல்லப கணபதி கோவிலில் வழிபாடு செய்து அம்பலகாரர் திருக்கண்ணில் அபிஷேகம் செய்து ஈ கள்ளர் திருக்கண்ணில் இரவு தங்கினார்.
மூன்றாம் நாள் மாலை 6 மணிக்கு மேல் சீர் பாதம் தாங்கிகளுக்கு பாத்தியப்பட்ட ஈ கள்ளர் திருக்கண்ணிலிருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவிலில் ராமலிங்க சேர்வை தானம் வழங்கப்பட்ட இடத்தில் மல்லிகை மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.
அங்கிருந்து இரவு 1.35 மணிக்கு புறப்பட்டு வாடிப்பட்டி, ராமநாயக் கன்பட்டி, பொட்டுலுபட்டி, தாதம்பட்டி நீரேத்தான், எல் புதூர், போடிநாயக்கன்பட்டி, ரயில் நிலையம் சொக்கையா சுவாமி ஜீவசமாதி மடம், என நகர் முழுவதும் முக்கிய வீதிகளில் உலா வந்து பல திருக்கண்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி, இன்று மதியம் கோவிலை அடைந்தார்.
விடிய விடிய நடைபெற்ற பூப்பல்லக்கு உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.