

திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகாரர் உற்சவம் 19 நாட்கள் நடைபெறும். 'பாஷ்யகாரர்' என்பது வைணவ சம்பிரதாயத்தின் மிக முக்கிய ஆச்சாரியரான ராமானுஜரை குறிக்கும் சிறப்புப் பெயராகும். விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலைநிறுத்த, பிரம்ம சூத்திரத்துக்கு 'ஸ்ரீபாஷ்யம்' என்னும் விளக்கவுரை எழுதியதால், அவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. உடையவர், எதிராசர், லட்சுமணமுனி, இளையாழ்வார் போன்ற பல பெயர்களில் ராமானுஜர் போற்றப்படுகிறார். அவருடைய பிறந்த நட்சத்திரமான திருவாதிரையை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்தச் சாத்துமுறை நடக்கிறது.
அவ்வகையில் இந்த ஆண்டின் பாஷ்யகாரர் உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றைய தினம் காலை கோவிலில் முதல் மணி அடித்ததும் உற்சவர் ராமானுஜரை தங்கத்திருச்சி வாகனத்தில் வைத்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். வீதிஉலாவின்போது ஜீயர் சுவாமிகள் நாலாயிரம் திவ்யப் பிரபந்த கோஷ்டி கானம் நடத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 22-ந்தேதி பாஷ்யகாரர் சாத்துமுறை உற்சவம் நடத்தப்படும்.
அதேபோல் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலிலும் பாஷ்யகார உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக 21-ந்தேதி போகி தேரும், 22-ந்தேதி சாத்துமுறையும், 23-ந்தேதி கந்தப்பொடி உற்சவமும் நடக்கிறது.
விழாவையொட்டி, தினமும் காலை கோவிலின் நான்கு மாட வீதிகளில் தங்கத்திருச்சி வாகனத்தில் பாஷ்யகாரர் ஊர்வலமும், மாலை பெத்த வீதி உற்சவமும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. தினமும் திவ்ய பிரபந்தம் பாராயணம். சாத்துமுறை, ஆஸ்தானம் நடக்கிறது.