வரலாறு போற்றும் விவிலிய தீர்ப்புகள்

விவிலியத்தில் இடம்பெற்ற சிறப்புமிகு தீர்ப்புகளை பற்றியும், அதில் இறைவனின் கரம் இருந்ததையும் அறிந்து கொள்வோம்.
சாலமோனின் ஞானமிகு தீர்ப்பு
மன்னர் சாலமோனின் நீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கு ஒன்று வந்தது. ஒரு பச்சிளம் குழந்தைக்காக இரு தாய்மார்கள் உரிமை கொண்டாடினர். இருவருடைய வாதங்களை கேட்டதும் மன்னர், காவலரை அழைத்து, 'உயிருடன் இருக்கும் இக்குழந்தையை இரண்டாக வெட்டி, இருவருக்கும் கொடு' என்று ஆணையிட்டார். காவலரும் குழந்தையை வாளால் வெட்ட கையை ஓங்கினார். குழந்தை கதறி அழுதது.
குழந்தையின் அழுகுரலை கேட்ட ஒரு தாய், மன்னரின் காலடியில் விழுந்து, "குழந்தையை வெட்ட வேண்டாம். அவளிடமே குழந்தையை கொடுத்து விடுங்கள். குழந்தை அவளிடம் உயிரோடு இருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்து கொள்வேன்" என்று கண்ணீரோடு கூறினாள். ஆனால் மற்ற தாயோ, "குழந்தையை இரண்டாக வெட்டுங்கள், அது இருவருக்குமே வேண்டாம்" என்றாள்.
உடனே மன்னர், "குழந்தையை வெட்டவேண்டாம். முதல் தாயிடம் குழந்தையை கொடுங்கள். அவளே உண்மையான தாய்" என்றார். இந்த தீர்ப்பின் வழியாக இறைவனின் ஞானம் சாலமோனிடம் இருந்ததை அறிய முடிகிறது.
தானியேலின் மறுவிசாரணை
பாபிலோனில் சூசன்னா என்ற பெண் வாழ்ந்து வந்தார். அவள் ஆண்டவருக்கு அஞ்சி நடந்து வந்தாள். அவள் தோட்டத்தில் உலா வந்து கொண்டு இருந்தார். அவளை கண்ட இரு நடுவர்கள், அவளது அழகில் மயங்கி அடைய விரும்பினர்.
ஒரு முறை சூசன்னா குளிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றாள். அங்கு இருவரும் மறைந்து இருந்தனர். சூசன்னாவிடம் ஓடிச்சென்று, "இங்கு நம் மூவரைத் தவிர வேறு யாரும் இல்லை, எங்கள் ஆசைக்கு இணங்கி விடு, இல்லையேல் நீ வேறு ஒரு இளைஞனுடன் தோட்டத்தில் பாவம் செய்தாய் என்று மக்கள் மன்றத்தில் சொல்லிவிடுவோம்" என்று பயமுறுத்தினர்.
சூசன்னா அவர்களின் இச்சைக்கு இணங்கவில்லை. இறைவனுக்கு எதிராக பாவம் செய்வதை விட சாவதே மேல் என்று மறுத்துவிட்டாள். உடனே இருவரும் மக்கள் மன்றத்தில், "சூசன்னா தோட்டத்தில் ஒரு இளைஞனுடன் உறவு கொண்டதை எங்கள் கண்களால் கண்டோம். அந்த இளைஞனை பிடிக்க முயன்றோம். அவன் ஓடிவிட்டான்" என்று அவள் தலையில் கைவைத்து சத்தியம் செய்து சாட்சி கூறினர். இருவரும் நடுவர்களாகவும், மூப்பர்களாகவும் இருந்ததால் அவர்கள் சொன்னதை ஏற்று சூசன்னாவுக்கு மக்கள் மன்றம் மரண தண்டனை கொடுத்தது.
சூசன்னா உரத்த குரலில் இறைவனை வேண்டினாள். அவளது குரல் இறைவனின் சன்னிதானத்தை எட்டியது. தூய ஆவியார் அவளது அழுகுரலை அந்தக் கூட்டத்தில் இருந்த இறைவாக்கினர் தானியேலின் இதயத்தில் ஒலிக்கச் செய்தார்.
உடனடியாக தானியேல், "இவளுடைய ரத்த பழியில் எனக்கு பங்கில்லை" என்று உரக்க கத்தினார். அவரிடம் மக்கள் நடந்ததை கேட்க தானியேல் அவர்களிடம், "வழக்கை சரியாக ஆராயாமலும், உண்மையை கண்டறியாமலும், அவசரமாக சூசன்னாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இம்மனிதர்கள் இருவரும் சூசன்னாவுக்கு எதிராக பொய் சாட்சி சொல்லி இருக்கிறார்கள்" என்று கூறினார்.
அதன்படி மக்கள் நீதி மன்றம் அவரையே வழக்கை மறு விசாரணை செய்ய சொன்னது. தானியேல் இரு சாட்சிகளையும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் இருந்து விசாரித்தார். முதல் சாட்சியிடம், 'எந்த மரத்தின் கீழ் சூசன்னா பாவம் செய்ததை நீர் கண்டீர்' என்று கேட்க, அவர் 'விளாமரத்தடியில்' என்றார். அதன் பின் மற்றவரை அழைத்து கேட்க, அவர் 'கருவாலி மரத்தடியில்' என்றார். இருவரின் வாய்மொழி சாட்சியங்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருந்தது. அவர்களது சாட்சி பொய் என்பதை நிரூபித்தார்.
மக்கள் நீதிமன்றம் சூசன்னாவை விடுதலை செய்தது. பொய் சாட்சி சொன்ன இருவருக்கும் மோசேயின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாறு சாலமோனை போல இறைஞானம் உள்ளவர்களாகவும், சூசன்னாவை போல இறைவனுக்கு உண்மையானவர்களாகவும், தானியேலை போல இறைவனின் குரலை கேட்டு, நீதியை நிலைநாட்டுபவர்களாகவும் வாழ்கிற மனநிலையை பெறுவோம். இறைவன் நம் வழியாக செயல்பட அவரை அனுமதிப்போம். இறைவனுடைய சாட்சிகளாய் என்றும் வாழ்வோம்.
-டி.எம்.ஜேம்ஸ் மார்ட்டின், நாகர்கோவில்.