

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதும் திருப்புகழ் பாடப்பெற்றதுமாகிய இக்கோவில் கல்யாண பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. இங்கு 6 வாரங்கள் வந்து வேண்டிக் கொண்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.
பல சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாகவும், திருப்பணி கும்பாபிஷேகம் காரணமாகவும் 7 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவ விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி வரும் 21-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இதனை முன்னிட்டு 20-ந் தேதி காலை கிராம தேவதை உற்சவம், அன்று மாலை விநாயகர் உற்சவம் நடைபெற உள்ளது.
21 ந்தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. கொடியேற்றம் முடிந்து சவுடால் உற்சவம் நடைபெறுகிறது. மாலையில் வெள்ளி மயில் வாகன உற்சவம் நடைபெறுகிறது. இதேபோல் தினமும் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
22-ந் தேதி காலையில் சூரியபிரபை, மாலையில் சந்திரபிரபை, 23-ந் தேதி காலையில் கேடயம் மாலையில் ஆட்டுக்கிடா வாகனம், 24 -ந்தேதி காலை கேடயம், மாலையில் கேடயம், 25 -ந்தேதி காலை கேடயம் மாலையில் அன்னவாகனம், 26-ந் தேதி காலை கற்பக விருட்ச வாகனம் மாலையில் கேடயத்தில் முருகப்பெருமான் எழுந்தருள்கிறார்.
27-ந்தேதி காலையில் உள்புறப்பாடு ரதமும் மாலையில் மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. 28ந் தேதி காலை ஆள்மேல் பல்லக்கு, மாலையில் குதிரை வாகனம், 29-ந்தேதி காலை தல விருட்ச வாகனம் மாலையில் கல்யாண உற்சவம், தொடர்ந்து பெரிய மயில் வாகனம் என தொடர்ந்து திருவிழா விமரிசையாக நடைபெறும். 30-ந்தேதி காலை சிறிய மயில் வாகன உற்சவம் மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலையில் புஷ்ப பல்லக்கு முடிந்து கொடியிறக்கப்படுகிறது. 31-ந்தேதி காலை சண்டிகேஸ்வரர் வெள்ளி இடப வாகன வீதியுலா, மாலையில் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு வல்லக்கோட்டையில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால் விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. உற்சவ நாட்களில் நாள்தோறும் கோவில் மயில் மண்டபத்தில் பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளன.