

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பங்குனிப் பெருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக கிராம தேவதை கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடும், இரவு நர்த்தன விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் புறப்பாடும் நடந்தது.
விழா நாட்களில், வெள்ளி பவழக்கால் வாகனத்தில் சாமி, அம்பாள் வீதி உலா, அம்பாள் மயில் வடிவில் சிவபூஜை காட்சியும், புன்னைமர வாகனம், கற்பகமர வாகனம், வேங்கைமர வாகனத்தில் வீதி உலா, வெள்ளி பூத வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், விழாவில் இன்று (ஞாயிற்றுகிழமை) தேரோட்டம் நடைபெற்றது. காலை 6.10 மணி அளவில் தேருக்கு சாமி எழுந்தருளல், 6.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து தேரில் இருந்து இறைவன் கோவிலுக்கு எழுந்தருளல், ஐந்திருமேனிகள் விழா நடந்தது. நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு திருஞானசம்பந்த சாமிகள் எழுந்தருளல், என்பை பூம்பாவையாக்கி அருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
மதியம் 3 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன், அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி மற்றும் இரவு சந்திரசேகரர் பாரிவேட்டை விழா நடக்கிறது. வருகிற 31-ந்தேதி ஐந்திருமேனிகள் விழாவும், ஏப்ரல் 1-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
அன்று இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு பங்குனி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இணை கமிஷனர் கவெனிதா உள்ளிட்ட விழா குழுவினர் செய்து உள்ளனர்.