

மந்திரங்களில் உயர்ந்ததாக கருதப்படும் காயத்ரி தேவிக்கு மிக குறைந்த அளவிலேயே ஆலயங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள காயத்ரி அம்மன் கோவில். காயத்ரி தேவிக்கு முதன் முதலாக கோவில் எழுப்பப்பட்ட தலமாக சிதம்பரம் கருதப்படுகிறது. விசுவாமித்ர மகரிஷி காயத்ரி மந்திரத்தை உபதேசித்து, பிரம்மரிஷி பட்டம் பெற்றார். காயத்ரி மந்திரத்தை சொல்லும்போது தோன்றிய உருவத்தை காயத்ரி தேவியாக வடித்தனர்.
ஒரு முறை மன்னன் ஒருவன், கடுமையான தோஷங்களால் துன்பப்பட்டான். தோஷ நிவர்த்திக்காக தல யாத்திரை சென்ற மன்னன், தில்லை காளியை தரிசித்துவிட்டு, நடராஜரை தரிசனம் செய்ய வந்தான். அப்போது, மன்னனை சந்தித்த அந்தணர் ஒருவர், காயத்ரி தேவியின் மந்திரத்தை மன்னனுக்கு சொல்லிக் கொடுத்தார்.
அந்த மந்திரத்தை உச்சரித்த மன்னனின் தோஷம் நீங்கியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மன்னன், அந்தணருக்கு பொன், பொருள் வழங்கினான். ஆனால் அதை ஏற்க மறுத்த அந்தணர், காயத்ரி தேவிக்கு கோவில் கட்டும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி மன்னன், இங்கு கோவில் அமைத்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் சிதலமடைந்த இக்கோவில், பின்னர் புதுப்பிக்கப்பட்டது.
இக்கோவிலில் சிறிய அளவிலான ராஜகோபுரம் காணப்படுகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் காயத்ரி தேவி சன்னிதியின் வலதுபுறத்தில் விநாயகரும், இடதுபுறத்தில் முருகனும் அருள்பாலிக்கிறார்கள்.
இக்கோவிலில் மூலவரான காயத்ரி தேவி மேற்கு நோக்கி காணப்படுகிறார். அன்னை ஐந்து முகங்களுடனும், பத்து திருக்கரங்களுடனும் தாமரை மலர் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவர் கைகளில் கதை, அங்குசம், சங்கு, சக்கரம், தாமரை மலர், சாட்டை, கிண்ணம் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறார். தேவியின் பாதத்திற்கு அருகில் ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் மற்றும் சரஸ்வதி, சாவித்திரி தேவியின் அம்சமாக காயத்ரி தேவி திகழ்கிறார். இங்கு காலையில் காயத்ரி தேவியாகவும், மதியம் சாவித்திரி தேவியாகவும், மாலை சரஸ்வதி தேவியாகவும் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
சிவாலயங்களில் சிவபெருமானுக்கு முன்பாக வீற்றிருக்கும் நந்தி பகவான், இங்கு தேவியின் முன்பாக காட்சி தருகிறார். அருகில் பலிபீடமும் உள்ளது. கருவறை கோஷ்டத்தில் சரஸ்வதி, அமுதக்கலசம் ஏந்திய மகாலட்சுமி, அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் காணப்படுகிறார்கள்.
இக்கோவிலில் பவுர்ணமி தோறும் சிறப்பு ஹோமமும், திருவிளக்கு பூஜையும் நடை பெறும். இதில் கலந்துகொண்டு அன்னையை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம், வேலையில்லாதவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும், தொழில் முன்னேற்றம் ஏற்படும், தோஷங்களும், வினைகளும் விலகும், செல்வ வளம் பெருகும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆலயத்தில் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு மூன்று நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். நவராத்திரி விழாவின்போது, லட்சார்ச்சனையும், விஜயதசமியன்று பாரிவேட்டையும் நடைபெறும்.
கோவில், காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.