பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேரோட்டம்
தேரோட்டம்
Published on

பவானி,

ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மன் மற்றும் ஆதிகேசவ பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து தினம்தோறும் உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் ரிஷப வாகனத்தில் 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள், திருமுறை ஆசான்கள், சந்தான குறவர்கள், சேக்கிழார் பெருமான் ஆகியோருக்கு சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் சப்பரங்களில் எழுந்தருளி, பவானி நகரின முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேளதாளங்கள் முழங்க, சிவனடியார் திருக்கூட்ட பக்தர்கள் தேவாரம் திருவாசகத்தை பாடியபடி சப்பரங்களை சுமந்து சென்றனர்.

இன்று காலையில் ஆதிகேசவ பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைக்குப் பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர். தேர் சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு பூக்கடை, விஎம்சி கார்னர், தேரோடும் வீதி வழியே மீண்டும் கோவிலை வந்து அடைந்தது.

நாளை காலையில் சங்கமேஸ்வரர் உடன்மர் வேதநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

தொடர்ந்து மே மாதம் 3-ம் தேதி வரை நாள்தோறும் அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com