

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கடந்த மாதம் 6-ந் தேதி பந்தக்கால் நடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சித்திரை பெருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவிலுக்குள் புறப்பாடாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து மங்கள வாத்தியம் முழங்க, 40 அடி உயர கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் பஞ்சமூர்த்திகள் படி சட்டத்தில் புறப்பாடு நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து விழா நாட்களில் பல்லக்கிலும், சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ந்தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் நடக்கிறது. தேரானது 4 ராஜவீதிகளில் வலம் வரும். மேலும் அன்றைய நாளில் அதிகாலை 5 மணிக்குள் முத்து மணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. விழாவின் 18-ம் நாளான 30-ந்தேதி தியாகராஜர் ருத்திரபாத தரிசனத்துடன் யதாஸ்தான பிரவேசம், தொடர்ந்து மதியம் நடராஜர் 4 ராஜவீதிகள் புறப்பாடு நடைபெற்று, சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலையில் கொடியிறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவுபெறுகிறது.