

ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரையப்பட்டியில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த வாரம் காப்பு கட்டுதல், பூத்தட்டு எடுத்து பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இதையடுத்து மகா மாரியம்மனுக்கு தினமும் மண்டகபடிகாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. மேலும் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மகா மாரியம்மன், சித்தி விநாயகர் உற்சவர்கள் தனித்தனி தேர்களில் எழுந்தருளியதும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஏராளமான பெண் பக்தர்கள் தேர் இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர்கள், முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தன. தேரோடும் வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் தேங்காய், பழம், பூ வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். நாளை மஞ்சள் நீர் விளையாட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.