

திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்மன் உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் ஆலய சித்திரை பெருந்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, விஸ்வகர்மா சமூகத்தாரின் மண்டகப்படியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் தீபாராதனையும் நடைபெற்றது. பின்பு ஏராளமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்திர விமானத்தில் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் ஆன்மிக சிறப்புகளை கொண்டது. திரு என்று ஆரம்பிக்கக்கூடிய ஊர்களில் எல்லாம் புகழோடு இருக்கக்கூடிய மரகதலிங்கம் திருத்துறைப்பூண்டியில் உள்ளது. விலைமதிப்பற்ற மரகத லிங்கத்திற்கும் மார்கழி மாதம் அதிகாலை ஐந்து மணிக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும் கஜசம்ஹார மூர்த்தி தனி சன்னதியாக காட்சியளிக்கும் ஸ்தலமாகவும், அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமாகவும் திகழ்கிறது.