கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி- திரளான பக்தர்கள் பங்கேற்பு

விஷு கனி காணும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு காய்கனிகளுடன் ஒரு ரூபாய் நாணயம் கை நீட்டமாக வழங்கப்பட்டது.
சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி
சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி
Published on

கன்னியாகுமரி,

உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டான சித்திரை மாதம் 1-ந்தேதி சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்திரை முதல் நாளான இன்று சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோமாதா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பசு மற்றும் கன்றுக்குட்டியை கோவிலின் கொடிமரம் முன்பு உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் நிறுத்திவைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோவிலின் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு அம்மன் கோமாதாவை தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

அதைத்தொடர்ந்து நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதன் பிறகு கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் மூலஸ்தான மண்டபத்தில் காய்கனிகளை குவித்து வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைரக் கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது.

அதன் பிறகு காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. இந்த சிறப்பு பூஜைகளில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு காய்கனிகளுடன் ஒரு ரூபாய் நாணயம் கை நீட்டமாக வழங்கப்பட்டது. இதனை கோவில் மேல் சாந்தி பக்தர்களுக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.

இன்று மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடைபெறும். இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம் முழங்க கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com