கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி

விஷு கனி காணும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு காய்கனிகளுடன் ஒரு ரூபாய் நாணயம் கை நீட்டமாக வழங்கப்படும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டான சித்திரை மாதம் 1-ந்தேதி சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டான நாளை செவ்வாய்க்கிழமை சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோமாதா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது பசு மற்றும் கன்று குட்டியை கோவிலின் கொடி மரம் முன்பு உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் நிறுத்தி வைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது. பின்னர் கோவிலின் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு அம்மன் கோமாதா தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது.

அதன் பிறகு விஷு கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது கோவிலின் மூலஸ்தான மண்டபத்தில் காய் கனிகளை மலைபோல் குவித்து வைத்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து தங்க ஆபரணங்கள் மற்றும் தங்கக் கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது. அதன்பிறகு காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

11 மணிக்கு அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படும். 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு காய்கனிகளுடன் ஒரு ரூபாய் நாணயம் கை நீட்டமாக வழங்கப்படும். இதனை கோவில் மேல்சாந்தி பக்தர்களுக்கு வழங்குகிறார்.

அதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம் முழங்க கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதனை தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com