

கோவை:
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் உற்சவர் கோனியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அம்மன், பல்லக்கில் எழுந்தருளி ராஜவிதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு வந்தடைந்தார்.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளியதும், மதியம் 2.05 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் சக்தி.. பராசக்தி’ என்று அம்மனை போற்றி முழக்கம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
வீதியின் இருபுறமும் பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்தனர். சிலர் உப்பு மிளகை தேர்க்காலில் தூவி வணங்கினர். தேர் ஒப்பனக்கார வீதி, பெரிய கடை வீதி வழியாக நிலையை அடையும்
தேரோட்டத்தை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2000-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.