அயோத்தி கோவிலில் ராஜா ராமர், சீதை சிலைகள் பிராண பிரதிஷ்டை விழா


அயோத்தி கோவிலில் ராஜா ராமர், சீதை சிலைகள் பிராண பிரதிஷ்டை விழா
x

ராம் தர்பார் வளாகம் மற்றும் 7 புதிய கோவில்களில் ஒரே நேரத்தில் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது.

அயோத்தி:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் பால ராமர் சிலை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ராமர் கோவில் வளாகத்தில் 2-ம் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்தது.

கோவில் கருவறை கோபுரம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கோவிலின் முதல் தளத்தில் உள்ள ராம் தர்பார் வளாகத்தில் ராஜா ராமர், சீதை மற்றும் அனுமன், லட்சுமணன் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த சன்னதி முழுக்க ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வெள்ளை பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டு கண்ணை கவரும் வகையில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. ராஜா ராமர், சீதை சிலைகள் பளிங்கு சிம்மாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன. அருகே அனுமன், லட்சுமணன் சிலைகள் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் கோவில் வளாகத்தில் மேலும் 7 புதிய கோவில்கள் கட்டப்பட்டு சிலைகள் நிறுவப்பட்டன.

இந்த தெய்வங்களின் பிராண பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் (3-ந்தேதி) தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் சிகர நிகழ்ச்சியான பிராண பிரதிஷ்டை இன்று காலை 11 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க விமரிசையாக நடந்தது.

விழாவில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு ராமர்-சீதை சிலைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார். இந்த விழாவில் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விழாவையொட்டி கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்த விழா பற்றி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்ரீ ராம தர்பாரில் ராஜா ராமர், வடகிழக்கு மூலையில் சேஷ அவதாரம், சிவபெருமான், தென்கிழக்கு (அக்னி) மூலையில் விநாயகர், தெற்குப் பகுதியில் அனுமன், தென்மேற்கு மூலையில் சூரியன், வடமேற்கு (வாயு) மூலையில் பகவதி தேவி மற்றும் வடக்குப் பகுதியில் அன்னபூர்ணா தேவி ஆகியோரின் சிலைகள் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story